Friday, February 17, 2012
Monday, February 13, 2012
சுடராய் ஒளிரும் சுனில் மைத்ரா
தோழர் சுனில் மைத்ரவின் பிறந்த தின கூட்டம் மதுரை கோட்டச்சங்கம் சார்பில் சங்க அலுவலகமான சுனில் மைத்ரா இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . தோழர் சுனில் மைத்ரவின் படத்திற்கு மதுரை கோட்டச்சங்க துணை தலைவர் தோழர் சந்திரசேகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். தோழர் வில்லியம்ஸ் தலைமையேற்க தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார் .
தொழிற்சங்க வானில் சுடராய் ஒளிரும் தோழர் சுனில் மைத்ராவின் நினைவுகளை முன்னால் தென்மண்டல துணை தலைவர்
தோழர் E M ஜோசப் அவர்கள் நினைவு கூர்ந்தார் . தொழிற்சங்க பாதையில் அவர் காட்டிய திசையில் அவரது தத்துவார்த்த வெளிச்சத்தினை மனதில் ஏந்தி பயணிக்க அவர்தம் நினைவுகள் பயனாய் அமைந்தது . நிகழ்வில்
தோழர் ரமேஷ்கண்ணன் அவர்கள் நன்றியுரை நவிழ்ந்தார்.
Monday, February 6, 2012
உலகமயக் கொள்கைகளை எதிர்த்து உயரும் உழைப்பாளிகளின் கரங்கள்
than K at 9:41 AM 0 comments
பிப்ரவரி-28 , நாடு தழுவிய வேலைநிறுத்தம்
*காக்க... காக்க .. பென்சன் காக்க
*பொதுத்துறை காக்க...
*விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்க
"ஒய் திஸ் கொலவெறி" என்று அரசாங்கத்திடம் கேட்கவேண்டும் . விவசாயிகளை,
சிறு வணிகர்களை , பொதுத்துறையை என்று அடுத்தடுத்து காவு கேட்கிற
உலகமயக் கொள்கைகள் பாய்ந்திருக்கிறது பென்சன் மீதும் . இலவசங்களே
வேண்டாம், விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று
நடுத்தர, சாமானிய மக்களின் அலறல்.
120 ஆண்டுகளாய் உழைப்பாளி மக்கள் அனுபவித்து வருகிற பென்சனுக்கு
பேராபத்து. ஒய்வு பெற்றால் என்ன கிடைக்கும், கிடைக்குமா, பென்சனுக்கு
காட்டிய பணமாவது திரும்பி வருமா என்று எந்த உத்தரவாதமும் இல்லாத
புதிய பென்சன் திட்டம். காலமெல்லாம் உழைத்து சம்பாதித்த சேமிப்பெல்லாம்
பங்குச் சந்தை சகுனிகளுக்கா?
2008 லிருந்து 2011 க்குள்ளாக 400 வங்கிகள் அமெரிக்காவில் திவால். அடித்த
புயலில் அசையாமல் நின்ற இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை வெட்டி
வீழ்த்த நினைக்கும் உள்ளூர்க் கோடாலிகளாக இநதிய ஆட்சியாளர்கள்.
சொந்த நாடுகளில் நம்பிக்கையை இழந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு
இங்கே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிற அபாயம். சேமிப்பில் விருந்து
தரலாம். ஆனால் இந்திய மக்களின் சேமிப்பையே விருந்தாக்க நினைக்கிறார்கள்
மன்மோகன் வகையறாக்கள்.
காலிப்பணியிடங்கள் லட்சக் கணக்கில்... தனியார் மயமாவதால் இட ஒதுக்கீடும்
களப்பலியாய்.. மாதச் சம்பளம் 2000 க்கும், 3000 க்கும் அல்லாடும் கோடானுகோடி
உழைப்பாளிகள் உள்ள நாட்டில் அரசு துறைகளிலும் அத்தக்கூலிகள். தொகுப்பூதியம்,
மதிப்பூதியம் என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படும் அவலம். பஞ்சப்படி என்றால்
என்னவென்றே தெரியாத 35 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள். முப்பது
ரூபாயை பஸ்சுக்கே அழுதுவிட்டு சாப்பாடுக்கும், சந்ததிகளின் கல்விக்கும்,
நோய் நொடிக்கும் எங்கேதான் போவார்கள் பாவம் அவர்கள்.
சந்தைதான் விலைகளைத் தீர்மானிக்கும் என்று பெற்ற குழந்தைகளை நட்டாற்றில்
விடுகிற குந்தியாக அரசாங்கம்.
இருக்கிற உரிமைகளும் பறிப்பு. பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசல்களில் எந்தக்
கொடியும் கூடாதாம். எந்த சப்தமும் கூடாது. அமைச்சர்கள் சொன்னாலும் தூக்கி
எறிகிற ஆணவம். சட்டம் என் கையில் என்று தெனாவட்டாகத் திரிகிற பெரும்
தொழிலகங்களுக்கு விசிறி வீசுகிற ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும்.
நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிற மதுபானக் கடைகள் பிரதான சாலைகளில்.
ஆனால் ஜனநாயக வழியில் உண்ணா நோன்பு என்றால் மக்கள் வாசனையே
இல்லாத பொட்டல்களில்.
தாவிக் குதிக்கிறது ஆண்டுக்காண்டு பில்லியனர்களின் சொத்து. ஆனால் போனஸ்
உச்சவரம்போ நிலையாய் நிற்கிறது அதே இடத்தில். பணிக்கொடை வரம்புகளும்
வளையாபதிகளாய்.
அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! பொதுத்துறை ஊழியர்களே! பிப்ரவரி 28
வேலை நிறுத்தம் நமது எதிர்ப்பை, அரசின் போக்கிற்கான மறுப்பை வலுவாகத்
தெரிவிக்கிற எழுச்சி மிக்க இயக்கம். வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்று
துவங்கி உலகின் 1500 நகரங்களில் உழைப்பாளி மக்களின் கரங்களும், குரல்களும்
ஓங்கி இருக்கிற காலம். நாமும் இணைவோம். பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் அன்று
தேசத்தின் சக்கரங்கள் நிற்கட்டும்.தவறான பாதையில் ஓடாமல் சரியான திசை
நோக்கி திருப்புவதற்கு.
பெரியோர்களே ! தாய்மார்களே!
இது மக்கள் நலன் காக்கும் போராட்டம். ஒரே பிரம்புதான் உங்கள் முதுகையும், நம்
அனைவரின் முதுகுகளையும் பார்க்கிறது பதம். கிடைக்காத வேலை, இறங்காத விலை,
எப்படி வைக்கமுடியும் அடுப்படியில் உலை என்று அரசிடம் கேட்கிற போராட்டத்திற்கு
தர வேண்டும் ஆதரவு. வரவேண்டும் கை கோர்த்து.
தயார்தானே நீங்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிடம் சொல்லுங்கள். இது நமக்கான
போராட்டம். காக்க..காக்க.. நலன் காக்க..உரிமை காக்க..தேசம் காக்க..
Subscribe to:
Posts (Atom)