Wednesday, March 26, 2014

மாற்று அவசியம்... மாற்றம் நிச்சயம்

                


                             மாற்று அவசியம்... மாற்றம் நிச்சயம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு மத்தியிலான ஏற்றத்தாழ்வு இருமடங்காக உயர்ந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது பற்றி நியை பேசிகிறார்; 1948லிருந்து 2008ம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த “ஒளிரும் இந்தியா” உட்பட 462 பில்லியன் டாலர் (சுமார் 25லட்சம் கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து கணக்கில் வராத கறுப்புப் பணமாக வெளியேறியுள்ளதாக “உலக நிதிநேர்மை” (ழுடடியெட குiயேnஉடைய iவேநபசயடவைல) என்ற அமைப்பு அறிவித்திருக்கிறது. மோடி வசதியாக இதை மறந்துவிடுகிறார்.இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதம் 55 கோடீஸ்வரர்களிடம் உள்ளது என்பதை ராகுலும் அறிவார், மோடியும் அறிவார்.
இந்த கோடீஸ்வரர்கள் அரசு அதிகாரத்தில் உயரிய இடத்தில் உள்ளனர். அம்பானியுடன் மோதி மணிசங்கர ஐயரும், ஜெய்பால் ரெட்டியும் பந்தாடப்பட்டனர். வீரப்பமொய்லி கொஞ்சம் அனுசரித்துப் போவதாக செய்திகள் உண்டு. குமாரமங்கலம் பிர்லா மீது வழக்குப்பதிவு என்றவுடன் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவைப் போல் பாஜகவின் அருண்ஜெட்லியும் துடித்துப் போனார். இது வர்க்கப் பாசம்தான்.எவ்விதமான உரிமைகளுமின்றி, அதிகாரங்களுமின்றி இந்தியாவில் 77 சதவிகித மக்கள் ரூ.20க்கும் கீழே வருமானம் பெற்று வாழ்கின்றனர். நுகர்வு அடிப்படையில் ஏற்றத்தாழ்வினை வெளிக்கொணரும் விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி 2000ம் ஆண்டில் நகர்ப்புறத்தில் பணக்காரர்களின் நுகர்வு ஏழைகளின் நுகர்வை காட்டிலும் 12 மடங்கு அதிகமாக இருந்தது. 2012ல் இது 15 மடங்காக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இதே காலகட்டத்தில் 7 மடங்காக இருந்தது. 9 மடங்காக உயர்ந்துள்ளது.
அந்த 12 ஆண்டுகளில் புதிய தாராளமய செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவடைந்ததே தவிர குறையவில்லை.மோடியின் தேநீர் கடை வீடியோ முகமும், ராகுலின் ரயில்வே சுமை கூலிகள் சந்திப்பும், இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாக காண்பிக்கவில்லை. மாறாக இருவருமே பெர்னார்ட்ஷா கூறிய வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது சிந்தனை களவாடப் படாமல் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். தேர்தல் களத்தில் தெளிவுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
“மாற்று அவசியம். மாற்றம் நிச்சயம்” என்ற காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட வெளியீட்டில் தோழர் ஆர்.கோவிந்தராஜன் எழுதியதிலிருந்து....

Sunday, February 2, 2014

OFFICE-BEARERS OF AIIEA

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1545733_653246868069069_1293844994_n.jpg

வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!

வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!
க.சுவாமிநாதன் 

புலியின் பற்கள் வலிமையென
புள்ளி மான்கள் போற்றுவதில்லை !
பூனையின் பாய்ச்சலை
எலிகள் பாராட்டுவதில்லை!
பல்லி நகரும் லாவகத்தை
பூச்சிகள் கூட சிலாகிப்பதில்லை!
ஐந்தறிவின் உள்ளுணர்வுகளை

ஊடகங்கள் தீர்மானிப்பதில்லை!
தெரிகிறது யார் எதிரியென்று...
ஆனால்
ஏழாம், எட்டாம் அறிவும் ஏங்குகின்றன
வலிமையான பிரதமர் வேண்டுமென்று.......!!


இடையில் பயணத்தில் ஒரு நடுத்தர வேலைவாய்ப்பில் இருப்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசியவுடன் வலிமையான பிரதமர் ஒருவர்தான் இன்றைக்கு நாட்டின் தேவை என்றார். அவரோடு ரொம்ப நேரம் உரையாடிய பிறகும் நான் நிற்கும் புள்ளியையும், அவர் நிற்கும் புள்ளியையும் இணைத்து ஒரு சின்னக் கோலம் கூடப் போட முடியவில்லை. ஒரு மணிநேரம் ஆன பிறகும் ஒரு சர்வாதிகாரிதான் நம்ம நாட்டுக்குப் பொருத்தமானவர் என்று அவர் கூறிய போது எதிரெதிரே அமர்ந்தாலும் ஏதோ ஒரு மைலுக்கு அப்பால் போய்விட்ட உணர்வு ஏற்பட்டது. ஆர்வத்தோடு அவருடைய முந்தைய அரசியல் சார்புகளை விசாரித்தபோது அன்னாஹசாரே, விஜயகாந்த், துக்ளக் சோ, எம்.எஸ். உதயமூர்த்தி என்று எங்கெங்கேயோ சுற்றி பின்னர்தான் அவர் நிற்கிற புள்ளி எனக்குத் தெரிந்தது. எதையோ தேடுகிற அவரது தவிப்பு புரிந்த பிறகு புள்ளிகள் நெருங்கி சிம்பிளான கோலம் ஒன்று வரைய முடிந்தது.

இந்திய அரசியலில் இரண்டே முகவர்கள்தான் ஊடகங்களின் கேமராக் கண்களுக்கு தெரிகின்றன. வலியவர் என்று குஜராத்காரரும், இளையவர் என்று குடும்ப வம்சத்து குல விளக்கும், மூன்றாவது ஃபிரேமிற்கு தேவையில்லாமல் இடித்துக் கொண்டு வீடுகளின் வரவேற்பறைகளில் காட்சியளிக்கிறார்கள். இது தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. இரு துருவங்களாகக் காட்டப்படும் இரண்டு பேரை திரைக்குப் பின்னிருந்து இயக்குபவர்கள் வெவ்வேறானவர்கள் அல்ல என்பதுதான் அரசியல் சூட்சமம்.

இச் சூட்சமத்திற்கான முயற்சிகள் புதியவை அல்ல. 2004ல் இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஓர் மத்திய அரசு அமைய  வேண்டுமென்ற நிலையேற்பட்ட போது இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான இராகுல் பஜாஜ், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய அரசு உருவாக வேண்டுமென்ற கருத்தை முன்மொழிந்தது நினைவில் இருக்கலாம். இந்தியாவின் பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அது தேசத்தின் நெருக்கடியாக சித்தரிப்பது அவர்களின் உத்தியில் ஒரு வகை. அவர்களின் பொருளாதார நலனுக்கு எதிரான மாற்று அரசியல் சற்றே துளிர்விடும் என்றாலும், அவர்கள் எல்லா ஆயுதங்களுடனும் களத்திற்கு வந்து விடுவார்கள். அப்படியொரு ஆயுதங்களில் ஒன்றுதான் எஜமானர்களின் குரலாக உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள்.

அணைக்காத கரங்கள்


ஒப்புதல் உற்பத்தி(Manufacture of consent ) என்பது பன்னாட்டு மூலதனத்தின், பெரும் தொழிலகங்களின் நலன்களைக் காக்கிற சாகசம். யாரைத் தாக்குகிறார்களோ அவர்களிடமிருந்தே தாக்குவதற்கான இசைவை பெற்றுக் கொள்வதே அதன் லாவகம். பழைய திரைப்படங்களில் மனைவியைக் கணவன் ஓங்கிக் கன்னத்தில் அறைந்தாலும் 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று மனைவியை அடுத்த காட்சியில் பாடவிடுவார்கள். இப்படிப்பட்ட 'ஒப்புதல் உற்பத்தி' தற்போது வலிமையான பிரதமர் வேண்டுமென்ற புதிய பாடலாக ஒலிக்கிறது.

2013டிசம்பரில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் பொருளாதாரப் பாதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கோபம், ஊழலின் மீதான வெறுப்பு ஆகியவையே காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. காங்கிரசுக்கு மாற்று வேறு எதுவும் கண்களுக்குத் தெரியாவிட்டால் பி.ஜே.பி, வேறு எதுவும் தெரிந்தால் காங்கிரஸ்-பிஜேபி-யைத் தாண்டி ஆம் ஆத்மி என்று தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. ஆகவே மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். மாற்று எது என்பதே கேள்வி?

நாமும் வலிமையான பிரதமர் வேண்டுமென்று நினைக்கிறோம்! ஆனால், அது தனிநபர் வலிமையல்ல. கொள்கை வலிமை. மக்களுக்கான அரசியலை அமலாக்குகிற அரசியல் உறுதி. நாலரைக்கோடி சில்லரை வணிகர்களின் வாழ்க்கையைச் சூரையாட வருகிற வால் மார்ட்டைத் தடுக்கிற வலிமை உள்ளவரா! இந்திய மக்களின் சேமிப்புகளை விழுங்க நினைக்கிற பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டுகிற வலிமை உள்ளவரா! கொம்பைச் சிலுப்பி வரும் விலைவாசி உயர்வுக் காளையை அடக்கும் வலிமை உள்ளவரா! கார்ப்பரேட் ஊழல் பேய்களை ஓட்டுகிற வலிமை உள்ளவரா! இதையெல்லாம் பற்றிப் பேசாமல் வலிமை என்றால் எது யாரைப் பாதுகாப்பதற்கு...... யாரைத் தாக்குவதற்கு..... இதுதான் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி...!!

கசப்பான காலங்கள்

கடந்த காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்! 2004ல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தோடு 340 பிளஸ் சீட்டுகளைக் கைப்பற்றும் என்று ஊடகங்களின் ஆரவாரத்தோடு தேர்தலைச் சந்தித்த வாஜ்பாய் ஏன் தோற்றுப் போனார்!. 1998டில்லி, இராஜஸ்தானில், பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்தது ஏன்! 1998ல் டில்லி முதல்வராக இருந்த பி.ஜே.பி-யின் சுஸ்மா சுவராஜ் வெளிச்சந்தையில் வெங்காயம் ரூ50 க்கு விற்றபோது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கிலோ ரூ11 க்கு விற்கிறேன் என்று சில இடங்களில் மட்டும் கடைவிரித்துக் கண் துடைப்பு செய்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சுஸ்மா சுவராஜ்-ன் தோல்விச் செய்தி வந்தவுடன் நல்ல பிள்ளையாக வெங்காயம் கிலோ ரூ10க்கு இறங்கி வந்தது தனிக் கதை.

எனவே, பொருளாதாரப் பாதை மாறாமல் விலைவாசி குறையாது. விலைவாசி குறைந்து விட்டால் பெரிய பெரிய மனிதர்களின் கல்லாப் பெட்டி நிறையாது. வலியவரோ, இளையவரோ... இவர்கள் விலைவாசி குறைப்பதற்கு என்ன மந்திரம் வைத்திருக்கிறார்கள். நமோ...நமோ... என்று முணு முணுப்பதாலோ, தலைமுறை தலைமுறையாய் வறுமையே வெளியேறு! என்று குடும்பப் பாட்டு பாடுவதாலோ விலைவாசி குறையாது. காரணம் பணவீக்கம் என்பது சாதாரண மக்களின் கிழிஞ்சு தொங்கும் பைகளிலுள்ள கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் வசதி படைத்தவர்களின் மூட்டைகளுக்கு மாற்றுகிற ஏற்பாடாகும். மோடியும், மோடியின் மூதாதையர்களும் இதை எப்படிச் செய்தார்கள் என்று பார்ப்போம்.

1998ல் பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்தில்தான் உணவுப் பொருட்கள் மீதான மொத்த விலைக் குறியீட்டெண் உச்சபட்சமாக இரண்டு இலக்க சதவிகிதமான 18சதத்தைத் தாண்டியது. காய்கறிகளின் விலைகள் 110சதவீதம், வெங்காய விலை 700 சதவீதம் என ஏறியது. 2000ம் ஆண்டில் அதே வாஜ்பாய் ஆட்சியில்தான் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ146ல் இருந்து ரூ 232க்கு ஏறியது. எரிபொருள், மின்சாரத்தின் விலைகள் 28சதவீதம் உயர்ந்ததென்பது 2001லிருந்து 2010 வரையிலான பத்தாண்டிலுங் கூட நடக்காத விலைவாசி உயர்வு, இதற்கெல்லாம் காரணம் பி.ஜே.பி அரசு முன்னெடுத்த பொருளாதார முடிவுகள்தான். இன்று காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வுக்கு பிள்ளையார் சுழி (விலைவாசி விநாயகர் என்று சூடம் காண்பித்தாலும் காண்பிப்பார்கள்) போட்டவர்கள் மோடியின் மூதாதையர்கள்தான்.

நடிப்புச் சுதேசிகள்

ஒன்று, தாராளமான இறக்குமதியைக் கட்டவிழ்த்து விட்டது. 1991ல் இந்தியாவின் 3300 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் உண்டு. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சாலைகள் தோறும் சுதேசி சோப் எது? பிளேடு எது? என்று நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் ஏப்ரல்-1 2000ல் 714 பொருட்கள் மீதான இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கினார்கள். ஏப்ரல்-1, 2001ல் இன்னும் 715 பொருட்கள் மீதான அளவுக் கட்டுப்பாடுகளையும் நீக்கினார்கள். இதற்காக அவர்கள் தெரிவு செய்த தேதி மக்களைக் கேலி செய்வதற்கா என்று தெரியவில்லை. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்

உப்பென்றும், சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி!கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

இரண்டாவது பெட்ரோலிய பொருட்கள் மீதான மையப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை(Administered Price Mechanism ) நீக்கிய புண்ணியவான்களும் இவர்கள்தான். 1989ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ8 ஆக இருந்தது. இன்று அது ரூ74க்கு உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு கிரின் சிக்னல் போட்டவர்கள் பி.ஜே.பி காரர்கள்தான்.15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலைகள் உயர்வைக் கணக்கிற் கொண்டு தானாகவே விலை மாறும் நடைமுறையைக் கொண்டு வந்தவர்கள். திருடிவிட்டு ஓடுபவனே திருடன்... திருடன்.. என்று கத்திக் கொண்டு ஓடுவது போல இன்று பெட்ரோல் விலை உயர்வுக்கு பி.ஜே.பி கண்ணீர் வடிப்பதும் நகைச்சுவைதான்.

மூன்றாவது, இறக்குமதி விலைச் சமன்பாடு (Import Price Parity ) என்ற நூதனமான விலை உயர்வை 2002ல் கண்டு பிடித்தவர்களும் இவர்கள்தான். இறக்குமதி ஆகாமல் உள்நாட்டில் உற்பத்தியாகிற பெட்ரோலுக்கும் இறக்குமதியானால் போடுகிற வரிகள், சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ் என ஆகிய செலவுகளைச் சேர்த்து விலை நிர்ணயம் செய்த விபரீதத்தை அரங்கேற்றினார்கள். ஆகாத செலவுக்கு பில் போட்ட ஃப்ராடுத்தனத்தை எதற்காகச் செய்தார்கள் தெரியுமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்றதால் தனியார் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கூட ண்டாமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் தனியார் பங்குகள் எவ்வளவு பாருங்களேன்.

இந்தியன் ஆயில் காப்பரேசன்21 சதவீதம்
இந்துஸ்தான் பெட்ராலியம்-49 சதவீதம்
பாரத் பெட்ரோலியம்-45 சதவீதம்
ஓ.என்.ஜி.சி-31 சதவீதம்
கெயில்-43 சதவீதம்
ஆயில் இந்தியா- 22 சதவீதம்

இவர்களின் லாப பங்கிற்காக அரசு காட்டிய கருணை இது. இது தவிர ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்களின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் லாபம் பெருக வேண்டாமா! ஆகாத செலவுக்கு பில் போட்டார்கள் வாஜ்பாயும், அத்வானியும்.பிள்ளையார் பக்தர்கள் அல்லவா! கடைத் தேங்காயை எடுத்துச் சிதறுகாய் போட்டார்கள்.

இப்படி அம்பானிக்கு கருணை காட்டிய இவர்கள் அப்பாவி விவசாயிகளுக்கு இறக்குமதி விலைச் சமன்பாட்டை கொண்டு வரமுடியுமா! பருத்தி சர்வதேசச் சந்தையில் ரூ 12000 விற்றபோது, இந்தியாவில் விவசாயிகளுக்கு ரூ 3000ம் தான் கிடைத்தது. அம்பானிக்கு வித்தியாசத்தை தந்தவர்கள், விவசாயிகளுக்கு வித்தியாசமாய் எதைத் தந்தார்கள் தெரியுமா! இரண்டு லட்சம் தூக்குக் கயிறுகள். இதில் ராமன், கணேசன், சர்தார், முபாரக், பீட்டர் என்று எந்த வித்தியாசமும் இல்லை.

நான்காவது, அத்தியாவசிய சரக்குகள் சட்டத்தை தளர்த்தி 50,000 டன்கள் வரை பெரும் வியாபாரிகள் பதுக்குவதை சட்டப் பூர்வமாக்கியதுதான். வாஜ்பாயின் வார்த்தைகளில் 'வியாபாரிகள் பதுக்குவது நமது நாட்டின் சட்டத்தின் படி குற்றமல்ல'. உளுந்தம் பருப்பு கிலோ ரூ 30ல் இருந்து ரூ 70க்கும், விளக்கெண்ணெய் ரூ 40ல் இருந்து ரூ80 க்கும், வெங்காயம் ரூ 4ல் இருந்து ரூ 60க்கும் ஏறியது. இந்த முடிவு எடுத்த பிறகுதான். சர்க்கரை போன்ற ரேசன் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்கள்.

இதே வியாபாரிகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி வால்மார்ட்டுக்கு கண்ணசைவு காட்டுகிற அளவுக்கும் பிற்காலத்தில் போனது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பது வேறு கதை. எஜமானனை மாற்றாமல் வாலாட்டுகிற நன்றியுள்ள பிராணிகள் அல்ல முதலாளித்துவக் கட்சிகள். வளர்ச்சிக் கேற்ப வாலைக் குழைத்து ஆட்டப் பழகிக் கொண்டது பி.ஜே.பி.

ஐந்தாவது முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தை அமலாக்கியது பி.ஜே.பி தான். சரக்குகள் கைமாறாமலேயே வணிகம் நடந்தேறுவதும். அதன் மூலம் செயற்கையாய் விலை ஏறுகிற புதிய மோசடி அரங்கேறியதும் இவர்களின் காலத்தில்தான். இந்தியப் பட்ஜெட் தொகையைப் போன்று எட்டு மடங்கு, பத்து மடங்கு வரை முன்பேர வர்த்தகச் சந்தையின் நடவடிக்கை மதிப்புகள் போனதென்பது இச் சூதாட்டம் எவ்வளவு உச்சத்தைத் தொட்டதென்பதற்கு அடையாளம். பாரம்பரிய பதுக்கலையும் ஊக்குவித்து நவீன பதுக்கலுக்கும் வழிவகுத்த இவர்களின் அடுத்த அம்பும் சாமானியனின் வயிற்றை மிகச் சரியாகவே குறி வைத்தது.

ஆறாவது , பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக காப்புரிமைச் சட்டத்தை திருத்த முனைந்தது. ஜெர்மனியின் பேயர் நிறுவனம் இந்தியாவில் 2லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த கேன்சர் மருந்துகள் தற்போது ரூ 10,000 க்கும் ரூ20,000 க்கும் உள்நாட்டில் கிடைக்கிறது. பி.ஜே.பி கொண்டு வந்த காப்புரிமைச் சட்டத்திருத்தம் அப்படியே நிறைவேற்றப் பட்டிருந்தால் பரிதாப நோயாளிகள் பல லட்சங்களை இன்னும் செலவழிக்க வேண்டியது இருந்திருக்கும். இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேறிய திருத்தமே சாதாரண மக்களின் உயிர் வாழும் உரிமைகளைத் தக்க வைத்துள்ளது.

ஆள் மாறாட்டமல்ல தீர்வு

பி.ஜே.பி-யின் ஆறுமுகங்கள் மட்டுமே இவை. இன்னும் பல்லாயிரம் முகங்களைக் காட்டக் காத்திருக்கிறது பி.ஜே.பி. வலிமையான பிரதமர் இதையெல்லாம் மாற்றுவாரா! விலைவாசிக்கு கடிவாளம் போடுவாரா! உத்தரகாண்டு வெள்ளத்தில் 30,000 பேரை ஒரே நாளில் காப்பாற்றி அனுமார் போல கரை சேர்த்ததாகக் கதைவிட்டார்களே! கோடானு கோடி மக்களுக்கும் அது போன்ற கதைகளைத் தயார் செய்வார்களா!

பாதை மாறாமல் தீர்வுகள் இல்லை! தேசத்தின் தேவை வேறு பிரதமர்அல்ல. வேறு பாதை !

இரயில் பயணத்தில் என்னுடன் வந்தவர் விவாதம் எங்கெங்கோ திசைமாறி போய்க் கடைசியில் சொன்னார். "ஆமா சார்! உடம்புக்கு ஏதாவது வந்துவிடக்கூடாது என்று பதட்டமாக இருக்கிறது தனியார் மருத்துவமனைக்கு அழுதே வாழ்நாள் சேமிப்பெல்லாம் போய்விடும்" என்று... நானும் சொன்னேன் "தேசத்திற்கும் ஏதும் வரக்கூடாதது வந்து விடக் கூடாதே என்ற பயம் நமக்குத் தேவைப்படுகிறது" என்று....


நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 23வது அகில இந்திய மாநாட்டில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வரலாற்றில் முதல் மகளிர் இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் எம்.கிரிஜா அவர்கள் மதுரை கோட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் தோழர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை ஏற்றார் தோழர் நா.சுரேஷ்குமார் மாநாட்டின் முடிவுகள் குறித்தும் அமலாக்கம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார் தோழர் பி மகாலிங்கம் முன்னிலை வகித்தார் . தோழர் கிரிஜா அகில இந்திய இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டு மதுரை கோட்டத்தில் பங்கேற்ற முதல் கூட்டம் என்பது சிறப்பு . அவரை மதுரை கோட்ட சங்க பொருளாளர் தோழர் அருணா அவர்கள் பொன்னாடை அணிவித்து நம் அன்பை தெரிவித்தார் . தோழர் கிரிஜா பணி சிறக்க தோழர் இ.எம்.ஜோசப் முன்னால் தென் மண்டல துணை தலைவர் அவர்களும் மதுரை கோட்ட எல்.ஐ .சி பென்சனர் சங்க செயலாளர் தோழர் சந்திரசேகர் (பாரதி ) அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் . 

   23வது அகில இந்திய மாநாட்டின் முடிவுகளை அமுலாக்கும் கோட்டங்களில் மதுரை கோட்டம் முதல் கோட்டமாக அமைய இந்நிகழ்வு  அமைந்தது .
 
                                                                  

Tuesday, January 28, 2014

New General secretary Com V Ramesh-
 flanked by Com Amanullakhan and  K Venugopal 

         


                        PROUD MOMENT FOR SZIEF
       Com M Girija elected as Joint secretary of AIIEA - 
                        First woman officebearer of AIIEA
 


 

 

Tuesday, January 21, 2014

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

Sunday, January 5, 2014

சிகரம் நோக்கி

 








 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மதுரை மாவட்டம் சார்பில் நடைபெற்ற  10 &  +12 மாணவர்களுக்கான சிகரம் நோக்கி நிகழ்ச்சி 05.01.2014 அன்று மதுரை இளங்கோ மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது 1000க்கும்அதிகமான மாணவ ,மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர் நிகழ்வில் மதுரை மாவட்ட DR.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தனது எளிய பங்களிப்புடன் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ,பயிற்சி கேள்வி பதில்களை தயாரித்து வழங்கியது .  மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து உரையாற்றினர் . மதுரை கோட்டச்சங்க பொதுசெயலாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் தலைவர் தோழர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர் . மைய ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பரவை பாலு , தோழர் கோவிந்தராஜன் ,தோழர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .