Thursday, November 15, 2012

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த அனுமதிப்பது அறிவுபூர்வமானது அல்ல

      


                                                  தோழர் அமானுல்லாகான்,
தலைவர்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
                        
02.11.2012 தேதியிட்ட ப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தது. இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நிதி மூலதனத்திடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு எவ்வளவு மோசமானது என்பதை இப்பேட்டி அம்பலப்படுத்துகின்றது. அப்பேட்டியின் தமிழாக்கம் இங்கே கீழே தரப்பட்டுள்ளது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ஐ நிறைவேற்றுவதன்  மூலம் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் எந்த ஒரு முயற்சியையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். இப்படி ஒரு நிலைப்பாடு ஏன் எடுக்கப்பட்டது என்பதை விளக்க முடியுமா?
தோழர் அமானுல்லா கான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அன்னிய மூலதனத்தை உயர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறது, ஏனென்றால் அன்னிய மூலதனத்தை உயர்த்தும் இந்த முடிவு சர்வதேச நிதி மூலதனத்தினை திருப்திப்படுத்தவும் அதன் நம்பிக்கையை பெறுவதற்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கோ அல்லது காப்பீடு செய்யும் பொது மக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. காப்பீடு, அதிலும் குறிப்பாக ஆயுள் காப்பீடு என்பது மக்கள் சிறுக சிறுக  சேமிக்கும் தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது. எனவே உள்நாட்டு சேமிப்பின் மீது அன்னிய மூலதனம் ஊடுருவதையோ, கட்டுப்படுத்துவதையோ  அதிக அளவில் அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமல்ல.
மேற்குலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிதித்துறையை தாராளமயமாக்கி சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டமைப்பிற்குள் உட்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றது. நிதித்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இன்சூரன்ஸ் சீர்திருத்தங்கள், பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதா, மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா ஆகியவை தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுதியாக நம்புகிறது. 2008 உலக நிதி நெருக்கடியினால் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றால் அதற்கு இங்கே இருந்த கட்டுப்பாடுகளும் டிரைவேட்டிவ்ஸ் போன்ற அபாயகரமான ஊக வணிகப் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படாததும்தான் காரணம். இந்திய நிதித்துறை சர்வதேச நிதி மூலதனத்தோடு முழுமையாக சங்கமிக்க அனுமதிக்கப்பட்டால், அது பாதுகாப்பாக இருக்காது.
ப்ரண்ட்லைன் : கூடுதல் மூலதனம் தேவைப்படுகிற தனியார் கம்பெனிகளுக்கு உதவ, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். அவரது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
தோழர் அமானுல்லாகான் : இல்லை, அவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனியார் கம்பெனிகள் தங்களின் விரிவாக்கத்திற்கு மூலதனம் இல்லாமல் சிரமப்படுகின்றனர் என்பதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. ஆயுள் காப்பீட்டில் 23 தனியார் கம்பெனிகளும் பொதுக் காப்பீட்டில் 18 கம்பெனிகளும் கடந்த பத்தாண்டுகளாக நாடெங்கிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விட அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கம்பெனிகளையெல்லாம் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. அவற்றின் வசம் ஏராளமான நிதியாதாரம் உண்டு. பங்குகளை வெளியிடுவதன் மூலம் மூலதனத்தை திரட்டிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதற்கான நியாயம் எதுவும் இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்களது மூலதனத் தேவைகளுக்கு உள்நாட்டுச் சந்தையில் இருந்து திரட்டுமாறு கூறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைக்குழுவின் ஒருமனதான பரிந்துரையை மத்தியரசு ஏற்கவில்லை.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறையை திறந்து விடுவதன் மூலம் அதிக அளவில் பிரிமிய வருமானம் இந்தியாவிற்குள் வரும் என்ற வாதம் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?
இன்சூரன்ஸ்துறையை அன்னிய மூலதனத்திற்கு திறந்து விட்டால் தனியார் கம்பெனிகளின் வெளிநாட்டுக் கூட்டாளிகள் சர்வதேச அளவில் திரட்டும் பிரிமிய வருமானத்தின் ஒரு பகுதியை, இந்தியாவின் கட்டமைப்புத் தேவைகளுக்கு கொண்டு வருவார்கள் என்ற  வாதம் நிரூபிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கூட்டாளிகள், தாங்கள் உலக அளவில் திரட்டும் பிரிமிய வருமானத்தை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்போது அவர்கள் மூலதனத்தை கொண்டு வருவார்கள் என்று திடீரென சொல்வது பலவீனமான ஒரு வாதம். மார்ச் 2011 ன் இறுதியில் இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டுக் கூட்டாளிகளின் மூலதனம் என்பது வெறும் 6,650 கோடி ரூபாய்தான். அதிகமான அளவில் அன்னிய நேரடி முதலீடு வரும் என்பதற்காக அன்னிய மூலதனத்தை உலவ விடுவதற்கு எந்த நியாயமும் இல்லை.  உள்நாட்டில் நிதியாதாரங்கள் இருக்கும் போது வளர்ச்சியை அன்னிய மூலதனத்திடம் பணயம் வைக்க முடியாது. அன்னியக் கம்பெனிகள் சிறிதளவு மூலதனம் கொண்டு வருவார்கள், அது கூட இங்கே உள்நாட்டு சேமிப்பை திரட்டுவதற்காகத்தான்.
கட்டமைப்புத் தேவைகளுக்காக இன்சூரன்ஸ்துறை நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் எல்.ஐ.சியின் பங்கு  மட்டுமே  90 % உள்ளதால் கட்டமைப்புத்துறைக்கான முதலீடுகளில் தனியார் கம்பெனிகள் குறிப்பிடத் தகுந்தவாறு எதுவுமே செய்யவில்லை என்று மத்தியரசே கவலை தெரிவித்துள்ளது. எந்த ஒரு அன்னியக் கம்பெனியும்  இங்கே நன்மை செய்வதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வருவதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் எல்லோருமே தங்களின் லாபத்திற்காக மட்டுமே முதலீடு செய்கிறார்கள். என்வே அன்னிய மூலதன வருகை இந்திய இன்சூரன்ஸ்துறையையும் கட்டமைப்புத்துறையையும் வளர்ச்சியடையச் செய்யும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமல்ல.உள்நாட்டு சேமிப்பிற்கு எந்த விதத்திலும் அன்னிய நேரடி முதலீடு மாற்றாக அமைய முடியாது.
அன்னிய மூலதன வர்ம்பை உயர்த்துவதற்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பவர்கள் அதன் மூலம்  இன்சூரன்ஸ்துறைக்கு மிகவும் தேவைப்படுகின்ற ஊக்கம், கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். மோசமான பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் இந்திய இன்சூரன்ஸ்துறை கடந்த சில ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டது என்ற கேள்வியை இத்தருணத்தில் எழுப்ப வேண்டியது முக்கியம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டு சேமிப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட போது  இந்திய இன்சூரன்ஸ்துறை  எப்படி சிறப்பாக செயல்பட்டதோ, அது போலவே சிரமமான பொருளாதார நிலைமையிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.பென்ஷன் ஆணைய புள்ளிவிபரப்படி 2010 ல் இன்சூரன்ஸ் துறை இந்தியாவில் 4.4% வரை ஊடுறுவியுள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த நிலவரம் எவ்வளவோ சிறப்பானது. இந்தியாவின்  குறைவான வருமான விகிதங்களைப் பார்க்கையில் இது மிகவும் மகத்தானது.
ஆயுள் காப்பீட்டு பிரிமிய வருவாயை திரட்டுவதில் உல்களவில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. பொதுக்காப்பீட்டிலும் சிறப்பான செயல்பாட்டை காண முடிகிறது.  ஊடுறுவல் சதவிகிதத்திலும் முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறை 1999 ல் தனியார் பங்கேற்பிற்காக திறந்து விடப்பட்டது. உள்நாட்டுக் கம்பெனிகள், வெளிநாட்டுக் கம்பெனிகளின் கூட்டோடு இத்துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வணிகத்தில் புகுந்தன. கடந்த பத்தாண்டுகளில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளோடு எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் போட்டியிட்டு சந்தையில் தங்களது முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறதா?
தோழர் அமானுல்லாகான் : ஆயுள் காப்பீட்டுத்துறையின் வளர்ச்சியை இயக்குகின்ற சக்தியாக அரசு நிறுவனமான எல்.ஐ.சி தான் உள்ளது என்பதை அறியும்போது அது உங்களுக்கு சுவாரஸ்யமான செய்தியாக இருக்கும். பத்தாண்டுகள் போட்டிக்குப் பின்பும் ஆகஸ்ட் 2012 புள்ளி விபரங்கள் படி இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தில் 76 % மும் பாலிஸிகள் எண்ணிக்கையில் 81 % மும் எல்.ஐ.சி யின் வசமே உள்ளது.
காப்பீடு செய்யும் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் எல்.ஐ.சி யை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தகர்க்கப்பட்டுள்ளது. முப்பது கோடி தனி நபர் பாலிஸிதாரர்களுக்கு சேவை செய்கிற எல்.ஐ.சி, இன்னொரு பத்து கோடி குழுக்காப்பீட்டு பாலிஸிதாரர்களுக்கும் சேவை செய்கிறது. சேவை செய்யப்படும் பாலிஸிகள் எண்ணிக்கையிலும்  கேட்புரிமங்களை பட்டுவாடா செய்வதிலும் உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி தான். அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்துவது என்பது எல்.ஐ.சி யையும் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் மற்றொரு முயற்சிதான்.
ப்ரண்ட்லைன் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்று மசோதாவின்  ஆதரவாளர்கள் முன்வைக்கிற வாதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? முன்னேறிய தொழில்நுட்பத்தை அது கொண்டு வருமா?
தோழர் அமானுல்லாகான் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மைகளை அளிக்கும் என்பது வெறும் மாயை. இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்காணைய ஆவணங்கள் படியே தனியார் கம்பெனிகளின் செயல்பாடு என்ன? கேட்புரிமங்களை எல்.ஐ.சி 99.86 % என்ற அளவில் பட்டுவாடா செய்கையில் தனியார் கம்பெனிகளின் சராசரி பட்டுவாடா என்பது கிட்டத்தட்ட 80 % மட்டுமே. இறப்புக் கேட்புரிமங்களில் பத்து சதவிகிதம் வரை தனியார் கம்பெனிகள் நிராகரித்துள்ளன. ஆனால் எல்.ஐ.சி யோ ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான கேட்புரிமங்களையே நிராகரித்துள்ளது.
இரண்டாவதாக காலாவதியான பாலிஸிகள் விகிதம் என்பதும் தனியார் கம்பெனிகளில்  அபாயகரமான நிலையில் மிக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித அளவில் கூட காலாவதி சதவிகிதம் உள்ள சில கம்பெனிகள் உண்டு. எல்.ஐ.சி யின் காலாவதி விகிதம் என்பது கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதம்தான். காலாவதியான பாலிஸிகள் விகிதம் மிக அதிகமாக உள்ளதைக் கொண்டுதான் தனியார் கம்பெனிகள் லாபம் ஈட்டுகின்றனர் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தனியார்மயமோ அன்னிய முதலீட்டு உயர்வோ பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் முழுமையான பொய்.
மேலும் இந்தியாவில் உள்ள  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் செல்வந்தர்கள், மிகப் பெரும் செல்வந்தர்கள் மீதே கவனம் செலுத்துகின்றன. பாலிஸிகளின் அளவையும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரிமியங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புலப்படும்.
அதே போல முன்னேறிய தொழில்நுட்பம் பற்றிய கூற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாட்டிலேயே மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளது எல்.ஐ.சி தான் என்ற  உண்மையை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ற பொருளையோ தொழில்நுட்பத்தையோ இங்கேயே உருவாக்கிக் கொள்ள வேண்டும், முடியும். வெளிநாட்டுக் கம்பெனிகளால்தான் இந்தியாவிற்கான பாலிஸி திட்டங்களையோ தொழில்நுட்பத்தையோ உருவாக்க முடியும் என்று கருதுவது தவறானது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறையில் அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் முடிவோடு பென்ஷன் நிதியிலும் அன்னிய முதலீட்டை 49 % வரை அனுமதிக்க மத்தியரசு முடிவெடுத்துள்ளதே, இதிலே ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் நிலை என்ன?
தோழர் அமானுல்லாகான் : பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது. பென்ஷன் நிதிகளை அரசு தனியார்மயமாக்க விரும்புகின்றது. மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாத  இந்தியா போன்ற நாடுகளில் சமூகப் பாதுகாப்புத்  திட்டங்களை நடத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது. பென்ஷன் நிதிகளில் அன்னியர்களின் பங்கேற்பு என்பது அபாயகரமானது.அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும் நிகழ்ந்தவற்றை நம்மால் புறக்கணிக்க முடியாது. அந்த நாடுகளில் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பென்ஷன் நிதிக் கம்பெனிகளும் நடத்திய ஊக வணிக சூதாட்டங்கள், பென்ஷனர்களின் சேமிப்பில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. அதே வர்த்தக சூதாடிகளிடம் மக்களின் சமூகப் பாதுகாப்பிற்கான சேமிப்பை இந்தியா ஒப்படைப்பதை அனுமதிக்க முடியாது.
ப்ரண்ட்லைன் : பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் மூலதனத் தேவைகளுக்கு பங்குச்சந்தையை அணுக அனுமதிப்பது என்ற முன்மொழிவு ஒன்றும் உள்ளதே. இதைப்பற்றி ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன கருதுகிறது?
தோழர் அமானுல்லாகான்: மூலதனத் தேவைகளுக்காக பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையை அணுக அனுமதிக்கும் முன்மொழிவு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஏற்புடையது அல்ல. மிகச் சிறந்த, லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பதுதான் இதன் பொருள். பொது இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலாக முதலீடுகளும் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் கையிருப்பாகவும் உள்ளது.  அவைகள் போதுமான அளவு மூலதனத்தோடுதான் இயங்கி வருகின்றன. எதிர்வரும் காலத்திலும் கூட கூடுதல் மூலதனத்தை புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே தேவைப்பட்டாலும் கூட அவர்களால் உள்ளுக்குள்ளேயே மூலதனத்தை திரட்டிக் கொள்ள முடியும். இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்க எந்த வித அவசியமும் நிச்சயமாக இல்லை.
ப்ரண்ட்லைன் : இந்த முன்மொழிவுகள் எல்லாம், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவுள்ளது.. இந்த முன்மொழிவுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன செய்து கொண்டிருக்கிறது?
தோழர் அமானுல்லாகான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சிகளால்தான் 1999 ல் அன்னிய மூலதன வரம்பு 26 % உடன் கட்டுப்படுத்தப் பட்டது. இந்த முறையும் கூட அரசின் முடிவை எதிர்ப்பதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியாக உள்ளது. எங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவுள்ளோம்.
இந்த முடிவுகளுக்கு எதிராக மக்களுடைய, அரசியல் கட்சிகளுடைய கருத்துக்களை திரட்ட ஏ.ஐ.ஐ.இ.ஏ முடிவு செய்துள்ளது. அரசு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.
எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  வேண்டுகோள் விடுக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது மத்தியரசிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவு.

  


எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.