Tuesday, November 15, 2011

தள்ளாடும் தனியார் துறை தாங்கிப்பிடிக்க முனையும் கை கள்

     
பெரு முதலாளிகளில் ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் எளிதில் நினைவுக்கு வருபவர் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் விஜய் மல்லையாதான். அவரது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களைக் கவருபவையாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டன. வெறும் காலண்டர் தயாரிக்க ஏராளமான மாடல்களை அழைத்துக் கொண்டு, தனி விமானத்தில் உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மல்லையா. அந்த செலவெல்லாம் புதுமையான உத்தியாகக் காட்டப்பட்ட மக்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகினர். கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வந்தபோது தனியார் துறைக்கு எடுத்துக்காட்டாக அதை சித்தரித்து வந்தனர். 

இவையனைத்தும் வெகு விரைவிலேயே அம்பலமாகிவிட்டன. 2003 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், ஒரு ஆண்டில்கூட லாபத்தில் இயங்கவில்லை. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு எட்டாயிரம் கோடி ரூபாயைத் தாண்டி நிற்கிறது. அவரது சொத்துக்கள் என்று பார்த்தால் ஆடம்பரக் கார்கள், பந்தயக்குதிரைகள், பழங்கால வாட்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா-1 அணி என்றுதான் பட்டியல் இருக்கிறது. மக்களின் பணத்தை ஆடம்பரமாக வாரிக் கொட்டியிருக்கிறார். தாங்க முடியாத கடன் என்றவுடன்தான் இது அம்பலமாகியிருக்கிறது. அனைத்துக் கடன்களையும் தீர்க்க அரசு உதவ வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்கள் பணத்தில் இந்தப் பணி நடக்கக்கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையா தலைமையிலான குழுமத்தில் ஆறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் பங்குகள் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. அதைத் தூக்கி நிறுத்தவே, நோய் வாய்ப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்துத்துறைக்கு உதவுவோம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்தார். அதேவேளையில்தான், பெட்ரோல் விலை மீண்டும் உயரும் என்று அபாயச்சங்கு ஊதியுள்ளார். கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு உதவக்கூடாது என்று பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கருத்து கூறியுள்ளார். இவருடைய குழுமம் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பித் தரப்படாதது பற்றி இவர் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தனிக்கதையாகும்.

நடப்பு நிதியாண்டுத் துவக்கத்தில்தான் தனது கடன் சுமையை நிதி நிறுவனங்கள் மீது கிங் ஃபிஷர் ஓரளவு இறக்கி வைத்தது. அதை பங்குகளாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாங்கிக் கொண்டன. அப்போது சந்தையில் நிலவிய பங்கு விலையில் 60 விழுக்காடு கொடுத்து அந்தப் பங்குகள் இந்த வங்கிகளுக்குக் கிடைத்தன. இந்த வகையில் சுமார் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மக்கள் பணத்தில் தீர்த்துக் கொண்டார் விஜய் மல்லையா. இதன்பிறகும் இருக்கும் நிறுவனத்தின் இழப்புதான் சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். 1,400 கோடி ரூபாய் கொடுத்து கிங் ஃபிஷரைக் காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை எடுத்த முயற்சிகள் அந்த வங்கிகளுக்கு பாதகமாகவே முடிந்துள்ளன. கடுமையான நெருக்கடி காரணமாக கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கின் விலை வெறும் ரூ.19 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. ஏகப்பட்ட கோடிகளை இரண்டு வங்கிகளும் இழந்து நிற்கின்றன. 

தனியார் துறை வெற்றியின் அடையாளமாகக் காட்டப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், முதலாளித்துவ கொள்கைகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

விஜய் மல்லையாவின் சொத்து 
2011 ஆம் ஆண்டுக்கணக்குப்படி அவருடைய சொத்து மதிப்பு 22 ஆயிரத்து 850 கோடி ரூபாய்.
610 கோடி ரூபாய் செலவில் ஃபார்முலா-1 அணி.
ஐ.பி.எல். அணியான ராயல் சேலஞ்சர்சை 464 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
16 ஆடம்பரக் கார்கள்
200 பந்தயக் குதிரைகள்
ஏராளமான பழங்கால வாட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை ஏலத்தில் எடுத்துள்ளார். 

கிங் ஃபிஷர் கடன் வாங்கியுள்ள வங்கிகள் 

பொதுத்துறை 

பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) - 1,410 கோடி ரூபாய்
ஐ.டி.பி.ஐ - 719 கோடி ரூபாய்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 702 கோடி ரூபாய்
பேங்க் ஆப் இந்தியா - 552 கோடி ரூபாய்
பேங்க் ஆப் பரோடா - 532 கோடி ரூபாய்
யுனைடெட் வங்கி - 395 கோடி ரூபாய்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 360 கோடி ரூபாய்
கார்ப்பரேசன் வங்கி - 305 கோடி ரூபாய்
யூகோ வங்கி - 287 கோடி ரூபாய்
ஸ்டேட் வங்கி ஆப் மைசூர் - 139 கோடி ரூபாய்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 122 கோடி ரூபாய்
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - 56 கோடி ரூபாய்
பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி - 51 கோடி ரூபாய்     
மொத்தம் = 5632 கோடிகள்
தனியார் துறை 

ஐசிஐசிஐ வங்கி - 430 கோடி ரூபாய்
பெடரல் வங்கி - 100 கோடி ரூபாய்
ஆக்சிஸ் வங்கி - 46 கோடி ரூபாய்
இண்டஸ் இந்த் வங்கி - 6 கோடி ரூபாய்

- நன்றி : தீக்கதிர் 
     

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.