ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி
முதலீட்டை எதிர்த்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சிவகங்கை நகர் மன்ற
தலைவர் தோழர் M.அர்ச்சுனன் மற்றும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் மெய்யப்பன் இந்திய தொழிற்சங்க மையம் சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் உமாநாத் இந்தியாவிற்கான மக்கள் இயக்க தலைவர் திரு கண்ணப்பன்,சிவகங்கை கிளை முதன்மை மேலாளர் திரு ரெங்கநாதன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் தோழர் ராகவன், முகவர் கிளை சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் என்ற பாபு (லியாபி) தோழர் சந்திரன் (லிகாய்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . மதுரை கோட்டஇன்சூரன்ஸ்
ஊழியர் சங்க பொதுசெயலாளர் தோழர் N.சுரேஷ் குமார் கருத்துரை வழங்கினார்.
Friday, December 28, 2012
"வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறுவியாபாரம் ?"
"வரலாமா
வால்மார்ட் ! வாழுமா சிறுவியாபாரம் ? " பிரசுர வெளியீட்டு நிகழ்வில் சிவகங்கை
நகர் மன்ற தலைவர் தோழர் M. அர்ச்சுனன் வெளியிட நகர் வர்த்தக சங்க
நிர்வாகிகள் திரு S.அறிவுதிலகம் மற்றும் P.சுகர்னோ ஆகியோர்
பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வினை இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை தலைவர் திருS.கண்ணப்பன் அவர்கள் தலைமை ஏற்க இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்டதலைவர் தோழர் G. மீனாட்சி சுந்தரம் அவர்கள் கருத்துரை வழங்கினர்.
நிகழ்வினை இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை தலைவர் திருS.கண்ணப்பன் அவர்கள் தலைமை ஏற்க இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்டதலைவர் தோழர் G. மீனாட்சி சுந்தரம் அவர்கள் கருத்துரை வழங்கினர்.
Wednesday, December 26, 2012
வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்
வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்
வெண்மணி சங்கமம் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு-டிசம்பர் 25,2012- தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்- திருவாரூர்-சிறப்புரை-தோழர் டில்லிபாபு, எம்.எல்.ஏ, தோழர் ப.நீலவேந்தன், தலைமை- க.சுவாமிநாதன். தர்மபுரி நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் இருந்து 10 பேர் பங்கேற்பு- ரூ 25000 தருமபுரி வழக்கு நிதி அளிப்பு - தருமபுரி இன்சூரன்ஸ் தோழர்களின் களப்பணிக்கு பாராட்டு- தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கைகள் பற்றிய பவர் பாயிண்ட் பிரசண்டேசன்-பாரதி புத்தகாலாயத்தின் இரண்டு நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பாளர் தோழர் சி சுப்பாராவுக்கு பாராட்டு.
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் தோழர் க .சுவாமிநாதன் தென்மண்டல பொதுசெயலாளர் ,தோழர் டில்லி பாபு அரூர் சட்ட மன்ற உறுப்பினர் , தோழர் நீலவேந்தன் ஆதி தமிழர் பேரவை மாநில செயலாளர் ஆகியோர் இன்சூரன்ஸ் ஊழியர்களுடன் வீர அஞ்சலி செலுத்தினர்
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் தோழர் க .சுவாமிநாதன் தென்மண்டல பொதுசெயலாளர் ,தோழர் டில்லி பாபு அரூர் சட்ட மன்ற உறுப்பினர் , தோழர் நீலவேந்தன் ஆதி தமிழர் பேரவை மாநில செயலாளர் ஆகியோர் இன்சூரன்ஸ் ஊழியர்களுடன் வீர அஞ்சலி செலுத்தினர்
Thursday, December 13, 2012
இன்சூரன்ஸ் ஊழியர்களின் இலட்சம் துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம்
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உயர்வை
கைவிடக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் மதுரை கோட்டம் முழுமையும் இலட்சம் துண்டு பிரசுரங்களை வழங்கும் இயக்கத்தை 12.12.12 அன்று ஒரே நாளில் 26 கிளை மையங்களில் நடத்தினர் . அதன் ஒரு பகுதியாக சிவகங்கை கிளை சங்கம் சார்பில் சிவகங்கை வார சந்தை பகுதியில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம் நடைபெற்றது .நிகழ்ச்சியினை தலைமை ஏற்று சிவகங்கை கிளை தலைவர் தோழர் செல்லபாண்டிநடத்தினார் .நிகழ்ச்சியில் மதுரை கோட்ட சங்க துணை பொருளாளர் தோழர் தனிகைராஜ் , சிவகங்கை CITU மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி தோழர் கந்தசாமி ,வழககறிஞர் தோழர் மதி , ஒய்வு பெற்ற அரசு ஊழியர்
தோழர் நல்லையா ,இன்சூரன்ஸ் சிவகங்கை கிளை ஊழியர்கள் மற்றும் முகவர்கள் திரளாக பங்கேற்றனர் .
Thursday, November 15, 2012
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை
இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த அனுமதிப்பது அறிவுபூர்வமானது அல்ல
02.11.2012
தேதியிட்ட ப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன
வரம்பை உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தது.
இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நிதி மூலதனத்திடம் ஒப்படைக்கும் அரசின்
முடிவு எவ்வளவு மோசமானது என்பதை இப்பேட்டி அம்பலப்படுத்துகின்றது.
அப்பேட்டியின் தமிழாக்கம் இங்கே கீழே தரப்பட்டுள்ளது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ஐ நிறைவேற்றுவதன் மூலம்
இந்திய இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் எந்த ஒரு
முயற்சியையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது என்பதை
நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். இப்படி ஒரு நிலைப்பாடு ஏன் எடுக்கப்பட்டது
என்பதை விளக்க முடியுமா?
தோழர்
அமானுல்லா கான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அன்னிய மூலதனத்தை
உயர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறது, ஏனென்றால் அன்னிய மூலதனத்தை உயர்த்தும்
இந்த முடிவு சர்வதேச நிதி மூலதனத்தினை திருப்திப்படுத்தவும் அதன்
நம்பிக்கையை பெறுவதற்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப்
பொருளாதாரத்திற்கோ அல்லது காப்பீடு செய்யும் பொது மக்களுக்கோ எவ்வித பயனும்
இல்லை. காப்பீடு, அதிலும் குறிப்பாக ஆயுள் காப்பீடு என்பது மக்கள் சிறுக
சிறுக சேமிக்கும் தொகையை நீண்ட
காலத்திற்கு முதலீடு செய்வது. எனவே உள்நாட்டு சேமிப்பின் மீது அன்னிய
மூலதனம் ஊடுருவதையோ, கட்டுப்படுத்துவதையோ அதிக அளவில் அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமல்ல.
மேற்குலக
நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின்
நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,
நிதித்துறையை தாராளமயமாக்கி சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டமைப்பிற்குள்
உட்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றது. நிதித்துறை இந்தியப்
பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இன்சூரன்ஸ்
சீர்திருத்தங்கள், பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதா, மற்றும்
வங்கிச் சட்ட திருத்த மசோதா ஆகியவை தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஊறு
விளைவிக்கும் என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுதியாக நம்புகிறது. 2008 உலக
நிதி நெருக்கடியினால் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றால் அதற்கு இங்கே
இருந்த கட்டுப்பாடுகளும் டிரைவேட்டிவ்ஸ் போன்ற அபாயகரமான ஊக வணிகப்
பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படாததும்தான் காரணம். இந்திய
நிதித்துறை சர்வதேச நிதி மூலதனத்தோடு முழுமையாக சங்கமிக்க
அனுமதிக்கப்பட்டால், அது பாதுகாப்பாக இருக்காது.
ப்ரண்ட்லைன்
: கூடுதல் மூலதனம் தேவைப்படுகிற தனியார் கம்பெனிகளுக்கு உதவ, இன்சூரன்ஸ்
துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதாக நிதியமைச்சர்
ப.சிதம்பரம் கூறுகிறார். அவரது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
தோழர்
அமானுல்லாகான் : இல்லை, அவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
தனியார் கம்பெனிகள் தங்களின் விரிவாக்கத்திற்கு மூலதனம் இல்லாமல்
சிரமப்படுகின்றனர் என்பதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. ஆயுள் காப்பீட்டில் 23 தனியார் கம்பெனிகளும் பொதுக் காப்பீட்டில் 18
கம்பெனிகளும் கடந்த பத்தாண்டுகளாக நாடெங்கிலும் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விட
அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கம்பெனிகளையெல்லாம் இந்தியாவின்
மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. அவற்றின் வசம் ஏராளமான
நிதியாதாரம் உண்டு. பங்குகளை வெளியிடுவதன் மூலம் மூலதனத்தை திரட்டிக்
கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.
முன்னாள்
மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதித்துறைக்கான
நாடாளுமன்ற நிலைக்குழு அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதற்கான நியாயம்
எதுவும் இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்களது மூலதனத்
தேவைகளுக்கு உள்நாட்டுச் சந்தையில் இருந்து திரட்டுமாறு கூறியது. ஆனால்
துரதிர்ஷ்டவசமாக நிலைக்குழுவின் ஒருமனதான பரிந்துரையை மத்தியரசு
ஏற்கவில்லை.
ப்ரண்ட்லைன்
: இன்சூரன்ஸ்துறையை திறந்து விடுவதன் மூலம் அதிக அளவில் பிரிமிய வருமானம்
இந்தியாவிற்குள் வரும் என்ற வாதம் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?
இன்சூரன்ஸ்துறையை
அன்னிய மூலதனத்திற்கு திறந்து விட்டால் தனியார் கம்பெனிகளின் வெளிநாட்டுக்
கூட்டாளிகள் சர்வதேச அளவில் திரட்டும் பிரிமிய வருமானத்தின் ஒரு பகுதியை,
இந்தியாவின் கட்டமைப்புத் தேவைகளுக்கு கொண்டு வருவார்கள் என்ற வாதம்
நிரூபிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கூட்டாளிகள், தாங்கள் உலக அளவில்
திரட்டும் பிரிமிய வருமானத்தை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குக் கொண்டு
வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்போது அவர்கள் மூலதனத்தை
கொண்டு வருவார்கள் என்று திடீரென சொல்வது பலவீனமான ஒரு வாதம். மார்ச் 2011 ன் இறுதியில் இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டுக் கூட்டாளிகளின் மூலதனம் என்பது வெறும் 6,650 கோடி ரூபாய்தான். அதிகமான அளவில் அன்னிய நேரடி முதலீடு வரும் என்பதற்காக அன்னிய மூலதனத்தை உலவ விடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. உள்நாட்டில்
நிதியாதாரங்கள் இருக்கும் போது வளர்ச்சியை அன்னிய மூலதனத்திடம் பணயம்
வைக்க முடியாது. அன்னியக் கம்பெனிகள் சிறிதளவு மூலதனம் கொண்டு வருவார்கள்,
அது கூட இங்கே உள்நாட்டு சேமிப்பை திரட்டுவதற்காகத்தான்.
கட்டமைப்புத் தேவைகளுக்காக இன்சூரன்ஸ்துறை நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் எல்.ஐ.சியின் பங்கு மட்டுமே 90 % உள்ளதால்
கட்டமைப்புத்துறைக்கான முதலீடுகளில் தனியார் கம்பெனிகள் குறிப்பிடத்
தகுந்தவாறு எதுவுமே செய்யவில்லை என்று மத்தியரசே கவலை தெரிவித்துள்ளது.
எந்த ஒரு அன்னியக் கம்பெனியும் இங்கே
நன்மை செய்வதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வருவதில்லை என்பதை நீங்கள்
மறந்து விடக்கூடாது. அவர்கள் எல்லோருமே தங்களின் லாபத்திற்காக மட்டுமே
முதலீடு செய்கிறார்கள். என்வே அன்னிய மூலதன வருகை இந்திய
இன்சூரன்ஸ்துறையையும் கட்டமைப்புத்துறையையும் வளர்ச்சியடையச் செய்யும்
என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமல்ல.உள்நாட்டு சேமிப்பிற்கு எந்த
விதத்திலும் அன்னிய நேரடி முதலீடு மாற்றாக அமைய முடியாது.
அன்னிய மூலதன வர்ம்பை உயர்த்துவதற்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பவர்கள் அதன் மூலம் இன்சூரன்ஸ்துறைக்கு
மிகவும் தேவைப்படுகின்ற ஊக்கம், கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். மோசமான
பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் இந்திய இன்சூரன்ஸ்துறை கடந்த சில
ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டது என்ற கேள்வியை இத்தருணத்தில் எழுப்ப
வேண்டியது முக்கியம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டு சேமிப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட போது இந்திய இன்சூரன்ஸ்துறை எப்படி
சிறப்பாக செயல்பட்டதோ, அது போலவே சிரமமான பொருளாதார நிலைமையிலும் கூட
சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.பென்ஷன் ஆணைய புள்ளிவிபரப்படி 2010 ல் இன்சூரன்ஸ் துறை இந்தியாவில் 4.4% வரை ஊடுறுவியுள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த நிலவரம் எவ்வளவோ சிறப்பானது. இந்தியாவின் குறைவான வருமான விகிதங்களைப் பார்க்கையில் இது மிகவும் மகத்தானது.
ஆயுள்
காப்பீட்டு பிரிமிய வருவாயை திரட்டுவதில் உல்களவில் இந்தியா எட்டாவது
இடத்தில் உள்ளது. பொதுக்காப்பீட்டிலும் சிறப்பான செயல்பாட்டை காண
முடிகிறது. ஊடுறுவல் சதவிகிதத்திலும் முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறை 1999 ல்
தனியார் பங்கேற்பிற்காக திறந்து விடப்பட்டது. உள்நாட்டுக் கம்பெனிகள்,
வெளிநாட்டுக் கம்பெனிகளின் கூட்டோடு இத்துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டது.
அதன் பின் இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வணிகத்தில்
புகுந்தன. கடந்த பத்தாண்டுகளில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளோடு எல்.ஐ.சி
போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் போட்டியிட்டு சந்தையில் தங்களது முதலிடத்தை
தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறதா?
தோழர்
அமானுல்லாகான் : ஆயுள் காப்பீட்டுத்துறையின் வளர்ச்சியை இயக்குகின்ற
சக்தியாக அரசு நிறுவனமான எல்.ஐ.சி தான் உள்ளது என்பதை அறியும்போது அது
உங்களுக்கு சுவாரஸ்யமான செய்தியாக இருக்கும். பத்தாண்டுகள் போட்டிக்குப்
பின்பும் ஆகஸ்ட் 2012 புள்ளி விபரங்கள் படி இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தில் 76 % மும் பாலிஸிகள் எண்ணிக்கையில் 81 % மும் எல்.ஐ.சி யின் வசமே உள்ளது.
காப்பீடு
செய்யும் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் எல்.ஐ.சி யை
பலவீனப்படுத்தும் முயற்சிகள் தகர்க்கப்பட்டுள்ளது. முப்பது கோடி தனி நபர்
பாலிஸிதாரர்களுக்கு சேவை செய்கிற எல்.ஐ.சி, இன்னொரு பத்து கோடி
குழுக்காப்பீட்டு பாலிஸிதாரர்களுக்கும் சேவை செய்கிறது. சேவை செய்யப்படும்
பாலிஸிகள் எண்ணிக்கையிலும் கேட்புரிமங்களை
பட்டுவாடா செய்வதிலும் உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
எல்.ஐ.சி தான். அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்துவது என்பது எல்.ஐ.சி யையும்
பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் மற்றொரு
முயற்சிதான்.
ப்ரண்ட்லைன் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்று மசோதாவின் ஆதரவாளர்கள் முன்வைக்கிற வாதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? முன்னேறிய தொழில்நுட்பத்தை அது கொண்டு வருமா?
தோழர்
அமானுல்லாகான் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மைகளை
அளிக்கும் என்பது வெறும் மாயை. இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு மற்றும்
ஒழுங்காணைய ஆவணங்கள் படியே தனியார் கம்பெனிகளின் செயல்பாடு என்ன?
கேட்புரிமங்களை எல்.ஐ.சி 99.86 % என்ற அளவில் பட்டுவாடா செய்கையில் தனியார் கம்பெனிகளின் சராசரி பட்டுவாடா என்பது கிட்டத்தட்ட 80 %
மட்டுமே. இறப்புக் கேட்புரிமங்களில் பத்து சதவிகிதம் வரை தனியார்
கம்பெனிகள் நிராகரித்துள்ளன. ஆனால் எல்.ஐ.சி யோ ஒரு சதவிகிதத்திற்கும்
குறைவான கேட்புரிமங்களையே நிராகரித்துள்ளது.
இரண்டாவதாக காலாவதியான பாலிஸிகள் விகிதம் என்பதும் தனியார் கம்பெனிகளில் அபாயகரமான
நிலையில் மிக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித அளவில் கூட
காலாவதி சதவிகிதம் உள்ள சில கம்பெனிகள் உண்டு. எல்.ஐ.சி யின் காலாவதி
விகிதம் என்பது கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதம்தான். காலாவதியான பாலிஸிகள்
விகிதம் மிக அதிகமாக உள்ளதைக் கொண்டுதான் தனியார் கம்பெனிகள் லாபம்
ஈட்டுகின்றனர் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தனியார்மயமோ அன்னிய
முதலீட்டு உயர்வோ பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் முழுமையான
பொய்.
மேலும் இந்தியாவில் உள்ள தனியார்
இன்சூரன்ஸ் கம்பெனிகள் செல்வந்தர்கள், மிகப் பெரும் செல்வந்தர்கள் மீதே
கவனம் செலுத்துகின்றன. பாலிஸிகளின் அளவையும் பொதுத்துறை மற்றும் தனியார்
நிறுவனங்களின் பிரிமியங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புலப்படும்.
அதே
போல முன்னேறிய தொழில்நுட்பம் பற்றிய கூற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
நாட்டிலேயே மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளது எல்.ஐ.சி தான் என்ற உண்மையை
யாராலும் மறுக்க முடியாது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ற பொருளையோ
தொழில்நுட்பத்தையோ இங்கேயே உருவாக்கிக் கொள்ள வேண்டும், முடியும்.
வெளிநாட்டுக் கம்பெனிகளால்தான் இந்தியாவிற்கான பாலிஸி திட்டங்களையோ
தொழில்நுட்பத்தையோ உருவாக்க முடியும் என்று கருதுவது தவறானது.
ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறையில் அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் முடிவோடு பென்ஷன் நிதியிலும் அன்னிய முதலீட்டை 49 % வரை அனுமதிக்க மத்தியரசு முடிவெடுத்துள்ளதே, இதிலே ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் நிலை என்ன?
தோழர்
அமானுல்லாகான் : பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது. பென்ஷன் நிதிகளை அரசு
தனியார்மயமாக்க விரும்புகின்றது. மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த
சமூகப் பாதுகாப்பும் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை
நடத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது. பென்ஷன் நிதிகளில் அன்னியர்களின்
பங்கேற்பு என்பது அபாயகரமானது.அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும்
நிகழ்ந்தவற்றை நம்மால் புறக்கணிக்க முடியாது. அந்த நாடுகளில் இன்சூரன்ஸ்
கம்பெனிகளும் பென்ஷன் நிதிக் கம்பெனிகளும் நடத்திய ஊக வணிக சூதாட்டங்கள்,
பென்ஷனர்களின் சேமிப்பில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. அதே வர்த்தக
சூதாடிகளிடம் மக்களின் சமூகப் பாதுகாப்பிற்கான சேமிப்பை இந்தியா
ஒப்படைப்பதை அனுமதிக்க முடியாது.
ப்ரண்ட்லைன்
: பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் மூலதனத் தேவைகளுக்கு
பங்குச்சந்தையை அணுக அனுமதிப்பது என்ற முன்மொழிவு ஒன்றும் உள்ளதே.
இதைப்பற்றி ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன கருதுகிறது?
தோழர்
அமானுல்லாகான்: மூலதனத் தேவைகளுக்காக பொதுத்துறை பொதுக் காப்பீட்டு
நிறுவனங்கள் பங்குச்சந்தையை அணுக அனுமதிக்கும் முன்மொழிவு அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஏற்புடையது அல்ல. மிகச் சிறந்த,
லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பதுதான் இதன்
பொருள். பொது இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் நான்கு பொதுத்துறை
பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலாக
முதலீடுகளும் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் கையிருப்பாகவும் உள்ளது. அவைகள்
போதுமான அளவு மூலதனத்தோடுதான் இயங்கி வருகின்றன. எதிர்வரும் காலத்திலும்
கூட கூடுதல் மூலதனத்தை புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே
தேவைப்பட்டாலும் கூட அவர்களால் உள்ளுக்குள்ளேயே மூலதனத்தை திரட்டிக் கொள்ள
முடியும். இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்க எந்த வித அவசியமும் நிச்சயமாக
இல்லை.
ப்ரண்ட்லைன்
: இந்த முன்மொழிவுகள் எல்லாம், நாடாளுமன்றத்தின் குளிர்காலக்
கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவுள்ளது.. இந்த முன்மொழிவுகளுக்கு எதிரான
போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன செய்து கொண்டிருக்கிறது?
தோழர் அமானுல்லாகான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சிகளால்தான் 1999 ல் அன்னிய மூலதன வரம்பு 26 %
உடன் கட்டுப்படுத்தப் பட்டது. இந்த முறையும் கூட அரசின் முடிவை
எதிர்ப்பதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியாக உள்ளது.
எங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவுள்ளோம்.
இந்த
முடிவுகளுக்கு எதிராக மக்களுடைய, அரசியல் கட்சிகளுடைய கருத்துக்களை திரட்ட
ஏ.ஐ.ஐ.இ.ஏ முடிவு செய்துள்ளது. அரசு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை
நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் நாடு தழுவிய ஒரு நாள்
வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.
எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது மத்தியரசிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவு.
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
Thursday, September 27, 2012
ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!
க.சுவாமிநாதன்.
பொதுச்செயலாளர்,தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு,
ஓரம் போ ! வால்மார்ட் வண்டி வருது!
தொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா? என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா!
2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு "தேச விரோதம்" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே ? என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது " ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது " என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.
யாருக்கு லாபம்!
சில்லறை
வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம்
என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள்
அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும்
எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள்
பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது
கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்?
ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு
வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை
வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார்
பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு
அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம்
பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30
லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்!
இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக
பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை
வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள்
பயப்படுகிறார்கள்.
இது என்ன ஜனநாயகம்!
போன நவம்பர் 2011
ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட
பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!
இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து
ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து
ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது.
இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ்
கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல்
அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக்
கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப்
பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை
வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"
இப்படி யாரையுமே
ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன
ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11
மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த
குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே
அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை
காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது.
உலக அனுபவம் என்ன ?
உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங்
அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிற
விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள்
மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய
ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991
இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில்.
இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது
குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை
விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய
வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி
அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு
அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த
போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள்
எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல்
வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ
சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை.
விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?
இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத
கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு
வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை
கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை
உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன.
அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி
ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால்
உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம்
கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம்
2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை
பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன.
நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று
செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை.
நுகர்வோருக்கும் ஆப்பு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான
கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை
வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது
சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012
அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை
குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய
துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள்
ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன்
ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார்.
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான்.
ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம்.
இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை
எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில்
மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம்.
இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான்
நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?
கூடாரத்திற்குள் ஒட்டகம்
10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு
அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான்
தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே
கூடாரத்திற்க்குள் மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை
குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும்,
விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில்
தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள்
போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும்,
மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும்
மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால்
அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று
அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம்
வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.
ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.
ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!
யாருக்கு லாபம்!
சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்? ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்! இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.
இது என்ன ஜனநாயகம்!
போன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!
இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"
இப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது.
உலக அனுபவம் என்ன ?
உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை.
விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?
இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை.
நுகர்வோருக்கும் ஆப்பு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012 அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?
கூடாரத்திற்குள் ஒட்டகம்
10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள் மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.
ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.
ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!
Wednesday, September 19, 2012
நினைவை விட்டு அகலாத நித்திய தலைவருக்கு வீர வணக்கம்
18.09.2012 தோழர் சுனில் மைத்ராவின் 16 வது நினைவு தினம்
நினைவை விட்டு அகலாத நித்திய தலைவருக்கு வீர வணக்கம்
இன்சூரன்ஸ் துறையில் முன்றாம் பிரிவு ஊழியராய் பணியில் சேர்ந்து தொழிற்சங்க பணியினை துவங்கி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபக தலைவராய் அரசியல் பணியில் தலைமை குழு உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்த உழைப்பாளி வர்க்கத்தின் போர்வாள் தோழர் சுனில் மைத்ராவின் நினைவை நம் நெஞ்சில் ஏந்தி அவர் தம் காட்டிய வழியில் பயணிப்போம். பொன்னுலகம் காணும் வரை ...
Saturday, September 1, 2012
செப் - 1 எல். ஐ .சி உதய தினம்
செப் - 1 எல். ஐ .சி உதய தினம்
எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐம்பத்தி ஆறாவது பிறந்த நாள். எல்.ஐ.சி தொடர்ந்து
வளர்ச்சிப்பாதையில் மக்கள் சேவையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது நமது
நிறுவனம் என்ற உணர்வோடு பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி
அதிகாரிகள் முகவர்கள் ஆகியோர் இந்த வெற்றிக்கு ஓரு ஒரு காரணம். எத்தனை
சவால்கள் வந்தாலும் அதனை முறியடித்து, போராட்ட உணர்வோடு தொய்வின்றி
உறுதியுடன் நடைபோடும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி யை
கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பது மற்றொரு காரணம்.
எல்.ஐ.சி யின் வளர்ச்சி பற்றி புரிந்து கொள்ள இந்த புள்ளி விபரங்களைப் பாருங்கள்
எண்
|
பொருள்
|
அளவு
|
1
|
கடந்தாண்டு பெற்ற பாலிசிகள்
|
357.51 லட்சம்
|
2
|
முதலாண்டு பிரிமிய வருமானம்
|
81,514.49 கோடி ரூபாய்
|
3
|
மொத்த வருமானம்
|
2,87,315.38 கோடி ரூபாய்
|
4
|
மொத்த பிரிமிய வருமானம்
|
2,08,802.90 கோடி ரூபாய்
|
5
|
பாலிசிதாரர் பட்டுவாடா
|
1,18,733.76 கோடி ரூபாய்
|
6
|
ஆயுள் நிதி
|
12,83,990.72 கோடி ரூபாய்
|
7
|
சொத்து மதிப்பு
|
14,17,891.79 கோடி ரூபாய்
|
8
|
மத்திய அரசு பத்திரங்களில் முதலீடு
|
4,41,760 கோடி ரூபாய்
|
9
|
மாநில அரசு பத்திரங்களில் முதலீடு
|
2,13,913 கோடி ரூபாய்
|
10
|
வீட்டு வசதி திட்டங்களில்
|
41,067 கோடி ரூபாய்
|
11
|
மின்சார உற்பத்திக்காக
|
86,880 கோடி ரூபாய்
|
12
|
குடிநீர், பாசன, வடிகால் திட்டங்களில்
|
10,494 கோடி ரூபாய்
|
13
|
மற்ற துறைகளில்
|
21,947 கோடி ரூபாய்
|
14
|
பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில்
|
3,94,779 கோடி ரூபாய்
|
15
|
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில்
|
7,04,151 கோடி ரூபாய்
|
16
|
தற்போது சேவை செய்யும் பாலிசிகள்
|
39.61 கோடி
|
Thursday, June 28, 2012
Sunday, June 17, 2012
தோழர் சரோஜ் அவர்களின் உறுதியான பாதை காட்டும் இறுதியாய் நிகழ்த்திய எழுச்சிமிக்க உரை
இறுதியாய் நிகழ்த்திய எழுச்சி உரை
17.06.2012 அன்று
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ்
சவுத்ரி அவர்களின் நினைவு நாள். அவரது நினைவைப் போற்றுகின்ற முறையில் 1998
ம் ஆண்டில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கத்தின் பதினேழு பொது மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை கீழே தமிழில்
அளித்துள்ளோம். தோழர் சரோஜ் அவர்கள் ஆற்றிய இறுதி உரையும் இதுதான்.
என்றென்றைக்கும் நமக்கு வழி காட்டுகின்ற, எழுச்சி அளிக்கிற உரையாக இந்த உரை
அமைந்திருக்கிறது என்பதே தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் சிறப்பம்சம்.
தோழர் சரோஜ் அவர்களின்
பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த ஞானம், வரலாற்றின் மீதான ஈடுபாடு, இலக்கிய
ஆர்வம், உழைப்பாளி மக்கள் மீதான நேசம், நம்பிக்கை, இன்றைய கலை வடிவங்கள்
மீதான விமர்சனப் பார்வை, சமூகத்தின் மீதான அக்கறை, இளைய தலைமுறைக்கான
வழிகாட்டுதல் ஆகியவற்றை கோபமும் நகைச்சுவையும் அடங்கிய இந்த உரை வெளிப்படுத்தியுள்ளது
தோழர் சரோஜ் அவர்களுக்கு செவ்வணக்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாநாட்டின்
தலைவர் அவர்களே, பிரதிநிதித்தோழர்களே, பார்வையாளர் தோழர்களே,
இம்மாநாட்டில் பங்கேற்கக் கூடிய நிலையில் இருந்து உங்களோடு சில வார்த்தைகள்
பேசுவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்க நான்
மிகவும் ஆர்வமாக இருந்தேன், ஏனென்றால் இந்த நூற்றாண்டின் இறுதி மாநாடு
இதுதான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பம்பாய் நகரிலிருந்து 1951 ல் தனது பயணத்தைத் துவக்கியது.
1951
ல் நடைபெற்ற அமைப்பு மற்றும் முதலாவது மாநாட்டில் நான் பங்கேற்கவில்லை.
இரண்டாவது மாநாடு தொடங்கி இந்தோர் மாநாடு தவிர மற்ற அனைத்து மாநாடுகளிலும்
நான் கலந்து கொண்டிருக்கிறேன். பம்பாயில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிற்குப்
பின்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உதயமான பின்பு நான் அந்த
இடத்தைச் சென்று பார்த்தேன். கோகினூர் 3 மில்லுக்குப்
பக்கத்தில் ராம் மாருதி சாலை மும்பை என்பது என் நினைவில் உள்ளது. தோழர்
தேவ் நான் சொன்னது சரிதான் என ஏற்றுக் கொள்வார். தேசம் விடுதலை பெற்று
நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு 1951 ல் நமது பயணம் துவங்கியது.
நாம் இப்போதும் 1998 ல் உள்ளோம். இந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டான 1999 நமது கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் பதினான்கு மாதங்களில் நாம் இருபத்தியோராம் நூற்றாண்டைக காணப்போகிறோம். முற்றிலும் புதிய நூற்றான்டு இது. எனவேதான் இம்மாநாட்டில் பங்கேற்க நான் ஆர்வமாக இருந்தேன்.
1996 மதுரை மாநாட்டில் தோழர் சுனில் அவர்களின் மறைவால் ஏற்பட்ட சோகத்தின் நிழல்
படிந்திருந்தது. தென் மத்திய மண்டலம் மற்றும் ஹைதராபாத் கோட்டத்தில் நம்
அமைப்பை பலப்படுத்துவதில் முக்கியப் பாத்திரம் வகித்த தோழர் சுகுனாகர்ராவ்
அவர்கள் பற்றிய சோகமான நினைவுகளைத் தாங்கியே இம்மாநாடு நடைபெறுகின்றது.
ஆனாலும் கூட இந்த விஷயங்களை நாம் வாழ்வில் ஏற்றுக்கொண்டுதான் தீர
வேண்டும். எதுவும் செய்ய இயலாது. வாழ்வின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது
போல இறப்பின் யதார்த்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான தோழர் சந்திரசேகர் போஸ், இம்மாநாட்டில்
பங்கேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என
வாழ்த்துகிறேன். அவர் நீண்ட, மகிழ்ச்சியான, ஆயுள் பெற வேண்டும் என என்னோடு
வாழ்த்து சொல்ல இம்மாநாடு முழுமையும்
இணையும் என்று நம்புகின்றேன். அறிக்கையில் என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளதோ
அதையே நான் மீண்டும் சொல்லப்போவதில்லை. அறிக்கையின் உயர் தரத்தை நீங்கள் முன்னரே பார்த்து விட்டீர்கள்.
ஆழமான அறிவும் ஞானமும் உடைய திறமையான ஒரு தோழர் என்னைத் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி தருகின்றது. அவரது ஆற்றல், பிரச்சினைகளை அணுகுவது, தொடர்ந்து
தன்னை மேம்படுத்திக்கொள்வது, விஷயங்களை முன்வைக்கும் பாங்கு, ஆகியவை
நிறைவைத்தருகின்றது. அவர் தனக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்திற்கே பெருமை தேடித்தந்துள்ளார். தனியார்மய எதிர்ப்புப்
போராட்டம், அது ஏ.ஐ.ஐ,.இ.ஏ வால் மட்டுமே சாத்தியம். எனக்கு அடுத்து
பொறுப்பேற்ற தோழர் அனைத்து வகையிலும் என்னை விஞ்சுவது எனக்கு மிக மிக
மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் சிறிது காலம் கூட இந்த அமைப்பிலேயே
தொடர்ந்திருந்தக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தியாவின்
அரசியல் நிலைமை பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகள்
முன்பாக சோவியத் யூனியன் வீழ்ந்த போது, சரியாக சொல்ல வேண்டுமென்றால்
முன்னாள் சோவியத் யூனியன், ஏனென்றால் அது சிதறுண்டு போய்விட்டது, சோஷலிஸம்
மறைந்து விட்டது, போய் விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். உங்களில் சிலர்
ப்ரதெரின்ஸ்கி எழுதிய பிரபலமான “ஒரு மகத்தான தோல்வி – இருபதாம்
நூற்றாண்டில் சோஷலிஸத்தின் தோற்றமும் மறைவும்” புத்தகத்தை
படித்திருப்பீர்கள்.
“அதிலே
சோஷலிஸம் முற்றிலுமாக வீழ்ந்து விட்டது. துரதிர்ஷடவசமாக அது வீழ எழுபது
ஆண்டுகளாகி விட்டது” எனது கேள்வி என்னவென்றால், மனித குலம் தோன்றி 5000 வருடங்களாகி விட்டது. 5000 ஆண்டுகளோடு 70 ஆண்டுகளை ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும். எதுவும் நிரூபிக்கப் படவில்லை. எதுவும் நிராகரிக்கப்படவில்லை.
நேற்று ஒரு தோழர் ஃபுகியாமா பற்றி பேசினார். அவர் ஃபுகியாமா பற்றியும் அவரது எழுத்துக்களையும் படித்திருப்பார் என்று நம்புகிறேன். சோவியத்
யூனியன் சிதைவுண்ட போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிதறுண்ட போது, சோவியத்
யூனியனின் பல மாநிலங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தி, அவை
சி.ஐ.எஸ் ( Common Wealth of Independent States )
என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்ட போது ஃபுகியாமா,
பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். வரலாறு இங்கே முடிந்து போய் விட்டது என
அறிவிக்கிறார்.
இதற்கு
மேல் வரலாறே கிடையாது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? “முன்னே
பார்ப்பதற்கு, முன்னோக்கிச் செல்வதற்கு, இனியும் வாழ்வதற்கு, எந்த வித
கோட்பாட்டிற்கும் வாய்ப்பே கிடையாது. வரலாறு இனி முன்னோக்கிச் செல்லாது.
இயக்கம் நின்று விட்டது என்றுதான் பொருள். இதுதான் ஃபுகியாமா சொன்னதின்
அர்த்தம். இப்போது அவர் என்ன உணர்ந்து கொண்டிருப்பார் என எனக்கு தெரியாது.
அவரது வார்த்தைகளை அவரே திரும்பப் பெற வேண்டும்.
இன்று
அவரது வார்த்தைகள் முற்றிலும் தவறு என நிரூபிக்கப்பட்டது. சோவியத்
யூனியனின் சிதைவிற்குப் பின்பு ஏகாதிபத்திய சக்திகள், அதிலும் குறிப்பாக
அமெரிக்கா, புதிய உலக ஒழுங்கை உருவாக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. இன்று
புதிய உலக ஒழுங்கீனம்தான் ஏற்பட்டுள்ளது. இன்று குழப்பம், மோதல்,
நாடுகளுக்கிடையே மோதல், நாடுகளுக்குள்ளே மோதல், போர்கள் என்று நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. உலகம் இதுவரை காணாத அநீதி, இதுவரை காணாத கொடூரம் என்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் இப்படிப்பட்ட சமத்துவமின்மையை இது நாள் வரை கண்டதில்லை.
எப்படியெல்லாம்
சமத்துவமின்மை நிலவுகிறது என்பதெல்லாம் அறிக்கை விரிவாகவே விளக்கியுள்ளது.
வீட்டிற்கு திரும்பிய பின்பும் தோழர்கள் அறிக்கையை கவனமாக படிப்பார்கள்
என்று நம்புகிறேன். அறிக்கையை மாநாட்டின் நினைவுச் சின்னமாக
வைத்திருக்காதீர்கள். தயவு செய்து அதை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.
பக்கம் 31 லிருந்து சில வரிகளை கூறும் ஆவலை என்னால் கட்டுப்படுத்த
இயலவில்லை.
“ உலகில் உள்ள மக்கள் தொகையில் மிகப் பெரும் பணக்கார நாடுகளில் உள்ள 20 % பேர், ஒட்டு
மொத்த நுகர்வோர் செலவினத்தில் 86 % ஐ செய்கின்றனர். ஆனால் 20 % ஏழை மக்கள்
செய்யும் செலவினமோ வெறும் 1.3 % தான்”. இந்த வேறுபாட்டை புரிந்து
கொள்ளுங்கள். வறுமையின் அளவையும், எந்த அளவிற்கு பாகுபாடும், வேற்றுமையும்
சுரண்டலும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள
மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ள பணக்காரர்கள், மாமிசம் மற்றும்
மீனில் 45 % ஐ உண்கிறார்கள். ஏழைகளாக உள்ள ஐந்தில் ஒரு பகுதியினருக்கோ 5 % மட்டுமே கிடைக்கிறது. 58 % மின்சார சக்தியை பணக்காரர்களே பயன்படுத்த ஏழைகள் பயன்படுத்துவதோ 4
% க்கும் குறைவு. செல்வந்தர்கள் 74 % தொலைபேசி இணைப்புக்களை
பயன்படுத்தினால் ஏழை மக்களுக்கோ 1.1 % தான். இதுதான் துயரத்தின் அளவு,
பாகுபாட்டின் அளவு. ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள், இங்கிலாந்து,
பிரான்ஸ், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்பு
காலனியாக இருந்த நாடுகள் என எல்லா நாடுகளுமே இன்று சுரண்டப்படுகின்றன.
அவைகளின் இயற்கை வளங்கள் அளவில்லாமல் சுரண்டப்படுகின்றன. எல்லா வழிகளிலும் அவை சமத்துவமற்ற சூழலில் சிக்கித் தவிக்கும்படியாக செய்யப்படுகின்றன.
இதைத்தான்
விரும்புகின்றார் ஃபுகியாமா. அவரும் அவரைப் போன்ற பேர்வழிகளும் போதிக்க
விரும்புவது இதைத்தான். “ இந்த புதிய ஒழுங்கற்ற உலக அமைப்பு தொடரட்டும். நீ
முன்னே செல்வதற்கு எதுவும் இல்லை என்பதால் கோபப்படாதே, போராடாதே,
போராடுவதற்கு எதுவுமில்லை, நம்பிக்கை வைப்பதற்கு எதுவும் இல்லை,
சாதிப்பதற்கு இனி எதுவும் இல்லை. ஏனென்றால் உலகம் இங்கேயே நின்று போய்
விட்டது.” நம்பிக்கையின்மையிலும் துயரத்திலும் உலகில் உள்ள மக்கள் அப்படியே
மூழ்கிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதலாளித்துவ
அமைப்பு முறைக்கு எதிராக போராடுவதைத்தவிர நமக்கு வேறு முக்கியமான கடமை
எதுவும் நமக்கில்லை. இந்த அமைப்பு முறை, பெரும்பான்மையாக இருக்கிற மக்களை
புறம் தள்ளி, அதிகாரம், செல்வம், வசதிகள் ஆகிய அனைத்தையும் அவர்களுக்கு
மறுக்கிற, இது அவர்களின் தலை விதி என்று வர்ணிக்கிற அழுகிப் போன அமைப்பு
முறை. இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் ஃபுகியாமா வகையறாக்கள் நம்மை
வலியுறுத்துகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக நமக்கு இதிலே ஒரு முறிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் ஓசையைக் காற்றில்
கேட்க முடிகிறது. மாற்றம் நாளையே மாற்றம் நிகழும் என்று நான் கூற
மாட்டேன், முதலாளித்துவத்தின் மாளிகைகள் நாளையே தகர்ந்து போய் அது தன்னைத்
தானே அழித்துக் கொள்ளும் என்று நான் சொல்ல மாட்டேன். மறு இணைப்புக்கான
துவக்கம், மறுபரிசீலனைக்கான செயல்வழிகள், முதலாளித்துவத்தை தகர்க்க வேண்டிய
அவசியத்தைப் பற்றிய புரிதல் ஆகியவை உருவாகியுள்ளது என்றுதான்
கூறுகின்றேன். உலகில் இன்று பதினாறு நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்
கட்சிகளின் பங்கேற்போடு கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உலகெங்கும் அறிகுறிகள் தென்படுகின்றது நான் மேலும் பல உதாரணங்களைக்
கூறப்போவதில்லை எனென்றால் தோழர் மான்சந்தா ஏற்கனவே தனது கடிகாரத்தை
பார்க்கத் தொடங்கியுள்ளார். அறிக்கை பல்வேறு உண்மைகளையும் விபரங்களையும்
அளித்துள்ளது.
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தால் வழி நடத்தப்படும் முதலாளித்துவவாதிகள், ஏகபோகவாதிகள்,
அதிகார வர்க்கத்தினர் வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை, வரலாற்றின் ஒரு பாடத்தை
மறந்து போய்விட்டனர், வரலாற்றின் ஒரு உன்னதமான பாடத்தை மறந்து
போகின்றார்கள். வரலாற்றை இறுதியாக தீர்மானிப்பது மனிதன்தான். மனித குலம்
செல்ல வேண்டிய பாதை, மனித குலம் கையிலெடுக்க வேண்டிய பணி – இவையெல்லாம்
தீர்மானிப்பது மனிதன்தான். இதை அவர்கள் மறந்து விட்டார்கள். இன்று மனிதன்
விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டான். ஏராளமான அறிகுறிகள் பல விதங்களில்
தென்படுகிறது. நம் பார்வையும் செவிகளும் சரியாக இருந்தால் நம்மால் இதனை
உணர்ந்து கொள்ள முடியும். நான் விரும்புவது இதைத்தான்.
அவர்கள்
என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்? நம் நம்பிக்கையை, உறுதியை, எதிர்காலத்தை
கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தை பார்க்காதே என்று
சொல்லுகிறார்கள். உங்கள் எதிர்காலமே முடிந்து விட்டது என்று
கதைக்கிறார்கள். சோவியத் யூனியனின் சிதைவோடு நம் எதிர்காலமே முடிந்து
விட்டது என்று பேசுகிறார்கள். மனித குலத்தை கொள்ளையடிக்க விழைகிறார்கள்.
சுரண்டலுக்குள்ளான, தரக்குறைவாக நடத்தப்படுகின்ற, துன்புறுத்தப்படுகின்ற,
அவமானங்களுக்கு உட்படுத்தப்படுகின்ற, துயருற்ற கோடிக்கணக்கான உழைக்கும்
மக்களை கொள்ளையடிக்க விரும்புகின்றனர். எதையும் எதிர் நோக்காதே, எதிர்காலம்
மீது நம்பிக்கை கொள்ளாதே, இதுதான் உனது விதி, வாழ்க்கையின் யதார்த்தம்
என்று ஏற்றுக் கொள் என உபதேசிக்கிறார்கள்.
நீங்கள்
என்ன சொல்வீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். இது உண்மையா? இது சரியா?
மனித குலம் இன்று மீண்டும் ஒன்றுபட்டு வருகிறது. எழுகிறது. சாமானிய
மனிதர்கள், அவர்கள் சுரங்கங்களில் அவதிப்படும் உழைப்பாளி, வயல்வெளிகளில்
பாடுபடும் விவசாயி, தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தும் தொழிலாளி,
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், எங்கெங்கும் காணப்படும் உழைப்பாளிகள்,
வேலையின்மையால் தவிப்பவர்கள், வறுமைக்கும் துயரத்திற்கும் ஆட்பட்டவர்கள்,
இப்படி அனைவரிடத்திலும் ஒரு தீப்பொறி உள்ளது. ஒரு நாள் அந்த தீ கொழுந்து
விட்டு எரியும்.
தாகூர்
பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது எண்பதாவது பிறந்த நாளின்
போது விடுத்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். அதற்கடுத்த சில மாதங்களில்
அவர் இறந்து விட்டார். “ மனிதனின் மீது நம்பிக்கை இழப்பது மிகப்பெரிய பாவம்
“ என்கிறார் அவர். எவ்வளவு மகத்தான செய்தி இது! தாகூரால் மட்டுமே இப்படி
சொல்ல முடியும். “முறையற்ற வழிகள் மூலம் நீங்கள் செய்கிற செயல்கள்
உங்களுக்கு தற்காலிகமாக பயனளிக்கலாம். ஆனால் நீங்கள் தரைமட்டத்திற்குச்
சென்று விடுவீர்கள்” என உபனிஷத்திலிருந்து அவர் மேற்கோள் காண்பிக்கிறார்.
அவர் யாருக்கு ஆதரவாக உள்ளார்? யாரை தட்டி எழுப்புகிறார்?
சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட, கொடுமைக்குள்ளான
மக்களின் குருதியால் ஆதிக்கவாதிகளால், வெற்றி பெற்றவர்களால் சேறாக்கப்பட்ட
வரலாற்றின் சாலைக்கு, வரலாற்றுச் சக்கரத்தை எடுத்து வந்த சாமானிய அடிமை
மனிதனுக்கு அவர் வேகம் அளிக்கிறார். வரலாற்றுச்சக்கரம்
முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் பேசுகிறார். நாகரீக
உலகின் அனைத்து வளங்களையும் உருவாக்கியது மனிதன். உலகெங்கும் நாம்
பார்க்கிற அனைத்து அற்புதங்களும் பிரம்மாண்டங்களும்
மனிதனின் அபாரமான படைப்புக்கள். அறிவியல், தொழில் நுட்ப
முன்னேற்றங்களுக்கு பின்னணியில் இருப்பது மனிதன்தான். தாகூர் இதை
நன்கறிந்தவர். அதனால்தான் அவர் சாமானிய மனிதனுக்கு எழுச்சியூட்டுகிறார்.
ஏனென்றால் நாளைய உலகை வெல்லப்போவது அவன்தான். இதுதான் இன்றைய நிலையும் கூட.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள்
நம் நம்பிக்கையை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள், நம் எதிர்காலத்தை பறிக்க
விழைகிறார்கள். நம்முடைய உறுதியை சிதைக்க எண்ணுகிறார்கள். நம்முடைய
வளங்களை சூறையாட நம்மிடமிருந்து அனைதையும் பறிக்கப்பார்க்கிறார்கள். எனவே
தோழர்களே, மாநாட்டிலிருந்து நாம் செல்கையில் நம்முடைய உறுதியை தக்க வைக்க
வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தின் மீது நாம் நம்பிக்கை
கொள்ள வேண்டும். நமக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்டு
செயல்படுத்தப்படுகின்றன. எனவே அனைத்து தோழர்களையும் அதிலும் குறிப்பாக இளைய
தோழர்களை, உலகம் எத்திசை வழியில் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள மேலும்
மேலும் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று
ஊதிய உயர்வுகளுக்குப் பிறகு ஒரு எல்.ஐ.சி ஊழியர் மாலை வீட்டிற்குச் சென்று
ஒரு கோப்பை தேநீர் அருந்திய பிறகு உடனடியாக தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து
விடுகிறார். “ஹம் ஆப்கே ஹைன் கோன்”, “ குச் குச் ஹோடா ஹை “ என
தொடர்ச்சியாய் நிகழ்ச்சிகள். இவையெல்லாம் உங்களுக்கு நீண்ட காலம்
பயனளிக்காது. பெரும்பாலனவை குப்பைகளாக, ஆபாசமானவையாக உள்ளவை. வன்முறையை,
சோர்வினை, சுணக்கத்தை தூண்டக்கூடியவை. அதிகம் படியுங்கள். மனித குல வரலாறு
எப்படி முன்னேறுகிறது என்பதை படியுங்கள். தயவு செய்து மேலும் மேலும்
படியுங்கள்.
வியட்னாமின் வரலாற்று நாயகரை நான் நினைவு கொள்கிறேன். யார் அவர்?
(அரங்கிலிருந்து
ஹோசிமீன் “ என்று குரல்கள்), ஆம் ஹோசிமீன், அவரது பெயர் இன்னும் நினைவில்
உள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வியட்னாமின் விவசாயிகள் தங்களின்
மிக்ச்சாதாரண ஆயுதங்களோடு மிக உயர்தர, நவீன ஆயுதங்களை உடைய அமெரிக்கர்களோடு
வாழ்வா- சாவா என்று யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தோழர் ஹோசிமீன்
எப்போதெல்லாம் போர் முனைக்கு தனது வீரர்களை சந்திக்க செல்கின்றாரோ,
அப்போதெல்லாம் அவர் அவர்கள் மத்தியில் உரையாடுவார். அப்படிப்பட்ட சில
உரைகளைப் படித்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
அதிகமான
படைகளையும் அதி நவீன ஆயுதங்களும் கொண்ட அமெரிக்கப் படையோடு அற்பமான
ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்கள் மத்தியில் அவர் பேசுவார்.” தோழர்களே நாம்
மிகவும் நன்றாக போரிடுகின்றோம். இந்த நாடு உங்கள் அனைவரையும் மிகவும்
பாராட்டுகின்றது, போற்றுகிறது. ஏனென்றால் நீங்கள் உங்கள் உயிர்களை தியாகம்
செய்கின்றீர்கள். இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக
நீங்கள் உங்கள் உயிரையே பலி கொடுக்க துணிந்துள்ளீர்கள். எப்போதெல்லாம்
நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் படியுங்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக
உங்களிடம் உள்ள மிக முக்கியமான ஆயுதம் புத்தகம்தான்” என்பார்.
தோழர்களே
புரிந்து கொள்ளுங்கள். அந்த மகத்தான புரட்சியாளர், தீர்க்கதரிசி, ஒரு
சிறந்த கம்யூனிஸ்ட் ஏன் அவ்வாறு கூறினார்? நம்முடைய மனதை, சிந்தனைகளை
விரிவு படுத்தவில்லையென்றால், உறுதியை தக்கவைக்கவில்லையென்றால், நமது
நம்பிக்கையை தக்கவைக்கவில்லையென்றால் அங்கே நம் எதிரி எளிதில் உள்ளே
புகுந்து விடுவான் என்று அவர் கூறுவார்.
இன்சூரன்ஸ்துறையில்
நாம் துவக்கத்திலிருந்தே இருக்கிறோம். பிறகு ஆல் இந்தியா லைப்பும்
ஐ.என்.டி.யு.சி யும் வந்தார்கள். பிறகு இந்த ஃபெடரேஷன் வந்தது. அதன் பின்பு
பி.எம்.எஸ் வந்தது. எல்லோருமே நம்பகத்தன்மை அற்றவர்கள். அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை சீர் குலைக்கும் எண்ணத்தோடு மட்டும் தோன்றியதால் அவர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதிலே இன்று எனக்கு மகிழ்ச்சிதான்.
நாம் ஏன் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் ஊழியர்களுக்கு பணியாற்றுவது, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது
என்ற கொள்கை வழியில் நாம் நிற்கிறோம். நாம் வாழ, பணியாற்ற, வளர
விரும்புகின்றோம். நாம் வாழ்கிறோம், பணியாற்றுகின்றோம், வளர்கின்றோம். அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்று
நான் உறுதியாக நம்புகிறேன். யார் வளர்கிறார்கள்? மேலும் வளர வேண்டும் என்ற
உறுதியான எண்ணம் கொண்டவர்கள் வளர்கின்றனர்.
வருகின்ற
நாட்களில் பதினேழாவது மாநாடு ஒரு மைல்கல்லாக மதிக்கப் படும் என்று
நம்புகிறேன். ஏப்ரல் 1988 ல் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட பால்
ராப்ஸன் அவர்களின் கவிதையை நினைவு கொள்ளுங்கள். “ நாம் அணிவகுத்துச்
செல்கையில் பாடும் பாடல் கொதிகலன்
போல எளிமையாக, நம் பள்ளத்தாக்குகள் போல ஆழமாக, நம் மலைகள் போல உயரமாக,
அவற்றையெல்லாம் படைத்த மனிதர்கள் போல உறுதியாக இருக்கும்” ஒரு புரட்சிக்
கவிஞனின் நம்பிக்கை ததும்பும் வார்த்தைகளைப் பாருங்கள்.
ஆகவே தோழர்களே, எனது உரையை இன்னும் நீளமாக்கி, மாநாட்டின் நேரத்தை மேலும்
அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நமது பணி நன்றாகவே உள்ளது என்று
சொல்ல நான் விரும்புகிறேன். கடந்த மாநாட்டிற்குப் பின்பு நாம்
வளர்ந்துள்ளோம். நமது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அனைத்து அம்சங்களிலும் நாம் முன்னேறியுள்ளோம். ஆனால் நாம் ஓய்வெடுக்க நாம்
விரும்பவில்லை. மேலும் அதிகமாக செயல்பட விரும்புகிறோம். ஃபுகியாமாவும்
இதரர்களும் பரப்புகின்ற, சோர்வையும் சுணக்கத்தையும் உண்டாக்கும்
தத்துவங்களுக்கும் சி.என்.என் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் பரப்பும் அபத்தக்
குப்பைகளுக்கு பலியாக விரும்பவில்லை. வெறும் அபத்தமும் வன்முறையுமாகவே உள்ளது.
ஹாலிவுட்
ஒரு காலத்தில் அற்புதமான திரைப்படங்களை தயாரித்தது. ‘டேல் ஆப் டூ
சிட்டிஸ், டேவிட் காப்பர்பீல்ட் ‘ இன்னும் எத்தனை? தோழர் சுந்தரத்தால்
மேலும் அதிகமான பெயர்களைக் கூற முடியும் ஏனென்றால் அவர் பல திரைப்படங்களை
பார்த்திருக்கிறார். நான் அந்த அளவு பார்த்ததில்லை. ஆனால் இன்றோ
அங்கிருந்து வெளியாவது எல்லாம் வெறும் பாலியல் உணர்வை தூண்டும்
அசிங்கங்கள்தான். கொஞ்ச நேரத்திலேயே நாம் களைப்பாகி விடுகிறோம்.
இவற்றையெல்லாம் ஐந்தாறு நிமிடங்களுக்கு மேல் என்னால் சகித்துக் கொள்ள
முடியவில்லை. பெரும்பாலானவர்களும் அப்படித்தான் உணர்வீர்கள் என்று
நம்புகிறேன்.
இவற்றின்
மூலம் நான் என்ன அடைகிறோம்? எதுவும் கிடையாது. வெறும் குப்பை, பாலியல்
மற்றும் வன்முறைகளே. மனிதன் பாலியல் உணர்வை மட்டும் கொண்டவனா என்ன?
மனித வாழ்வு மிகவும் உன்னதமானது. ஆணும் பெண்ணும் மிகவும் உன்னதமானவர்கள்.
வாழ்வில் சாதிக்க வேண்டியுள்ளது. நிறைவேற்ற வேண்டியவை உள்ளது, நினைத்து
மகிழ வேண்டியவை. சிலவற்றை பின்பற்ற வேண்டியுள்ளது.
எனவே
தோழர்களே, நம்மைச்சுற்றி விரிக்கப்படும் வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
நம் பாதையை திசை மாற்ற, நம் உறுதியை சிதைத்திட, நம் வேகத்தை சீர்குலைக்க
உருவாக்கப்பட்டுள்ள பொறிகளில் சிக்காதீர்கள். இந்த வார்த்தைகளோடு நான்
உரையின் நிறைவுக்கு வருகிறேன். உங்கள் அத்துனை பேருக்கும் எனது நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள். இரண்டாயிரமாவது ஆண்டில் பொன் விழா மாநாடு
நடைபெறுகையில் மேலும் அதிகமான தோழர்கள் வருவார்கள், அதிகமான இளைஞர்கள்
பங்கேற்பார்கள். நரைத்த முடியுடையோர் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி
மறைவார்கள். இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
பதிவிறக்கம் : நன்றி வேலூர் கோட்டம்
பதிவிறக்கம் : நன்றி வேலூர் கோட்டம்
Subscribe to:
Posts (Atom)