தென் மண்டலப் பொதுச்செயலாளர்
தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய ஒரு அற்புதமான
கட்டுரை கீழே.
மசோதாக்களை இழுத்து வந்தோம்!
மக்கள் மன்றத்திற்கும்..
கே. சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மீது நமக்கு மிகுந்த அக்கறை உண்டு.ஏனெனில் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் எந்த உரிமைகளும்
கருணையாலோ, பெருந்தன்மையினாலோ தரப்படுவதில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய எழுச்சியும், அதில் பங்கேற்ற மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டிய கட்டாயமுமே நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரசவித்தது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
அமெரிக்க ஜனநாயகத்தில் ஆப்ரிக்க-அமெரிக்கருக்கு வாக்குரிமை ஒபாமா பிறந்த ஆண்டிற்குப் பின்னர்தான் தரப்பட்டது என்று மாநிலங்களவையில் தோழர் சீதாராம் யெச்சுரி குறிப்பிட்டது ஏகடியம் அல்ல. ஒவ்வோர் உரிமையும் மக்களின் திரட்டலாலும், விழிப்பினாலும் ஈட்டப்படுகிறது என்பதற்கான பகிர்வே அது. இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் டாக்டர் அம்பேத்கர் " ஒரு மனிதன் , ஒரு வாக்கு"- "ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" என்பதையே முன்வைத்தார். அதில் முதல் பகுதி நிறைவேறிய அளவிற்கு இரண்டாவது பகுதி ஈடேறவில்லை என அம்மாமனிதரே வருந்தியதும் வரலாறு. ஏற்றத்தாழ்வுமிக்க சமுகத்தில் ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்பதை நோக்கி முன்னேற இன்னும் திரட்டலும், விழிப்பும் தேவைப்படுகிறது.
இந்திய சிவில் சமுகம் என்ற பெயரில் சிலர் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச்
சிறுமைப்படுத்துவது போல் வெளியிடும் கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆழமான விவாதங்கள் நடைபெறுவதும், மக்களின் கருத்துக்கள் திரட்டப்படுவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துமென்பது நமது உறுதியான நம்பிக்கை. இச் சரியான பார்வையே இன்சூரன்ஸ் துறையைப் பாதுகாக்கிற போராட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தொடர்ந்த வெற்றிகளுக்கு காரணம் ஆகும். எல்.ஐ.சி திருத்த சட்டம், இன்சூரன்ஸ் சட்ட திருத்த சட்ட வரைவு குறித்த அண்மைக் கால அனுபவமும் அதுவே.
எல்.ஐ.சி திருத்தச் சட்டம்
எல்.ஐ.சி திருத்த சட்ட வரைவு 2008 ல் அறிமுகம் செய்யப்பட்ட போது அக் குறு
மசோதாவிற்குள் ஒளிந்திருந்த அபாயங்கள் பலருக்குப் பிடிபடவில்லை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மட்டுமே ஊழியர்களையும்,மக்களையும் திரட்டிப் போராடியது. அதன் காரணமாகவே அச் சட்டவரைவு சர்ச்சைக்குள்ளானதாக மாற்றப்பட்டது. இதனால் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு அமைப்புகள், இன்சூரன்ஸ் துறை நிபுணர்கள் தங்களின் கருத்துக்களைச் சொல்கிற, பகிர்கிற, முன்வைக்கிற வாய்ப்புகளையும் அது உருவாக்கியது. பொதுவாக பொருளாதாரப் பாதை குறித்த ஒருமித்த கருத்துக்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளும் கூட தங்களின் எதிர்க் கட்சி அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக நியாயம் பேச வேண்டிய அவசியத்தை இது ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் எல்லாம் நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்குள்ளானது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் தனது அறிக்கையில் எல்.ஐ.சி சட்ட திருத்த வரைவின் மீது அதே கேள்விகளை எழுப்பியது. நிலைக் குழு சொன்னால் மட்டும் நமது ஆட்சியாளர்கள் காதுகளில் ஏறிவிடுமா? எத்தனையோ முறை நிலைக்குழு சொன்னதை அந்தக் காது வழியாக விட்ட அனுபவம் தேசத்திற்கு உண்டு. ஆனால் அரசாங்கம் எல்.ஐ.சி திருத்தச் சட்டத்தில் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனெனில் AIIEA உருவாக்கியிருந்த மக்கள் கருத்தின் வலிமை அரசாங்கத்தின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இதை நாம் காண முடிந்தது. மாநிலங்களவை நியமன உறுப்பினரும், முன்னாள் மும்பை பல்கலைக் கழக துணை வேந்தருமான டாக்டர் பாலா சந்திர முங்கேகர் உரையாற்றுகையில் அவர் மும்பையில் எல்.ஐ.சி பாலிசிதாரர் கவுன்சிலில் உறுப்பினராக இருந்ததையும், நூற்றுக்கும் மேலான பாலிசிதாரர்களிடம் கலந்துரையாடி இருப்பதையும், அதில் ஒருவர் கூட எல்.ஐ.சி யில் தான் பெற வேண்டிய உரிமங்களுகாக ஒரு ருபாய் கூடக் கொடுக்க வேண்டி வந்ததாக சொல்லவே இல்லை என்பதைப் பதிவு செய்துள்ளார். நேர்மையான சேவைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்! பொதுத் துறை நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே இவ்வளவு பாராட்டுக்கள் குவிவதென்பதை விட வேறு என்ன பெருமை தேவை ? இந்திய மக்களின் ஒட்டுமொத்த உணர்வின் வெளிப்பாடு அல்லவா இது.
இதன் விளைவாக நிலைக்குழுவின் முக்கியப் பரிந்துரைகள் எல்லாவற்றையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது.
1 . அரசின் மூலதனத்தை ரூ 5 கோடியில் இருந்து ரூ 100 கோடியாக உயர்த்தினாலும் எதிர்கால உயர்வு தேவைப்பட்டால் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் என்பதும் அரசே அக்கூடுதல் முதலீடைப் போடவேண்டும் என்பதையும் அரசு ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் பங்கு விற்பனைக் கனவு இப்போதைக்கு கலைந்துபோயிருக்கிறது. எதிர்காலத்திலும் அரசின் தூக்கத்தை AIIEA யின் இயக்கங்கள் கெடுக்கும் என்பதும், கனவுகள் கலையும் என்பதும் உண்மை.
2 . எல்.ஐ.சி பாலிசிகளுக்கு உள்ள அரசு உத்தரவாதம் முழுமையாகத் தொடரும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்.ஐ.சி வணிகத்தை மனோரீதியாகச் சிதைக்கிற தனியார்களின் ஆசையில் மண் விழுந்துள்ளது.
3 . எல்.ஐ.சி புதிய கிளைகளைத் திறக்கிற அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது " மயிலைப் பிடித்து காலை ஒடித்து ஆடச் சொல்கிற " உலகமயத்தின் சதிக்கு எதிரான சாதனை ஆகும்.
4 . எல்.ஐ.சி யின் உபரியில் 95 சதவீதம் போனஸ் ஆக பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாற்றி 90 சதவீதம் என அறிவிக்கப்பட்டு இருப்பது ஓர் பின்னடைவுதான். ஆனால் இக் குறைப்பு ஏற்கனவே உள்ள பழைய பாலிசிகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருப்பது ஓர் ஆறுதல்.
இவையெல்லாம் ஓர் தொழிற்சங்கம் இயக்கம் எந்த அளவிற்கு மக்களை நெருங்க முடியும்; ஆதரவைப் பெற முடியும்; உலகமயத்திற்கு லகான் போட முடியும்; மககள் போற்றுகிற பொதுத் துறையாக ஒரு நிறுவனத்தை வளர்க்க முடியும் என்பதற்கு சீரிய சாட்சியங்கள் ஆகும்.
இன்னொரு அரசியல் படிப்பினையும் உண்டு. போனஸ் குறைப்பிற்கு எதிராக சி.பி,எம் உறுப்பினர் பன்ஸ் கோபால் சௌத்திரி முன்மொழிந்த திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 107 வாக்குகளும் கிடைத்தன. இடதுசாரிகள் 62 பேர் இருந்திருந்தால் இன்னும் அதிக எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கும். அரசும் 300 எம்.பிக்களையாவது திரட்டியே சட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருந்திருக்கும்.இப்படி அரசியலை உரசிப் பார்க்கிற வாய்ப்பும் தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைக்கிறதல்லவா!
இன்சூரன்ஸ் சட்டத் திருத்த வரைவு ...
இன்சூரன்ஸ் சட்டத் திருத்த சட்ட வரைவு என்பது அதன் பெயர் என்றாலும் அந்நிய முதலீடு மசோதா என்பதே அதன் பிரபல பெயர். AIIEA எண்ணற்ற கருத்தரங்கங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள், கலை வடிவிலான இயக்கங்கள், மனித சங்கிலிகள், இன்னும் எத்தனையோ வடிவங்களில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. 25 எல்.ஐ.சி ஊழியர்கள் உள்ள மையங்களில் கூட நூற்றுக்கணக்கான மக்களை ஈர்க்க முடியும் என்பதை இவ்வியக்கங்கள் நிரூபித்துள்ளன. இதன் தாக்கம் நிலைக் குழுவின் அறிக்கையில் பிரதிபலித்துள்ளது.
* அந்நிய முதலீட்டு உயர்வுக்கான அவசியம் இல்லை என நிலைக் குழு ஒருமித்த குரலில் ஓங்கி அடித்துள்ளது. இதைப் பற்றி விவரிக்கையில் 2008 உலக நெருக்கடியின் அனுபவத்தை இந்தியா கணக்கிற் கொள்ள வேண்டும் என்று அக்குழு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டு கால தனியார் அனுபவமும் அவர்கள் ஆதாரத் தொழில் முதலீடு, வகை வகையான காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிக் குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அக் குழு சுட்டுகிறது. இதுதானய்யா, காட்டுக்கத்தலாக நாங்க இவ்வளவு காலமா சொல்லி வந்திருக்கோம் என்று ஆற்றாமையோடும், அதே நேரத்தில் தங்களது குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கிற பெருமையோடும் ஒரு இன்சூரன்ஸ் ஊழியன் நினைப்பது இயல்பானதுதான்.
* எனினும் பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு நிலைக்குழு ' ஆம்' சொல்லியிருப்பது வேதனைக்குரியதுதான். நான்கு பொதுத் துறை நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற AIIEA யின் மாற்று ஆலோசனையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும்.
* ஒரு சுவாரஸ்யமான விசயம். நிலைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளித்த ஐ.சி.ஐ.சி.ஐ - லோம்பார்ட் நிறுவன பிரதிநிதி இப்போது அந்நிய முதலீடு உயர்வுக்கு தேவை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். தொடர்ச்சியான பயணத்தில் இப்படி எதிர்பாராத ஆதரவுகள் கூட - தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம்- கிடைக்கும். இப்படி எதிரி முகாமில் ஏற்படும் முரண்பாடுகளை லாவகமாக பயன்படுத்துகிற உத்திகளையும் போராட்டக் களங்கள்தான் கற்றுக்கொடுக்கின்றன. சோர்வற்ற பயணங்களில் மட்டுமே கிடைக்கிற நிழல் இது.
* AIIEA யின் போராட்டத்திற்குப் பெரும் பலமாகத் திகழ்பவர்கள் எல்.ஐ.சி முகவர்கள்.எல் ஐ சி யின் மொத்த முகவர் எண்ணிக்கை 15 லட்சம் ஆகும். அவர்களின் புதுப்பித்தல் கமிசன், வாரிசுக் கமிசன் ஆகியன எவ்விதப் பாதிப்பும் இன்றி தொடர வேண்டும் என நிலைக் குழு பரிந்துரைத்திருக்கிறது.
ஒரு மசோதா மக்களின் கருத்துக்களும் பெரும்பாலும் இணைக்கப்பட்டு சட்டம் ஆகியிருக்கிறது. இன்னொரு சட்ட வரைவு மக்களின் கருத்து என்கிற அரவைக்கு ஆளாகியிருக்கிறது. எத்தனையோ மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் இல்லாமல் கூட நிறைவேறி மக்களின் நலனைப் பதம் பார்த்திருக்கின்றன.ஆனால் 1 லட்சம் உழைப்பாளர்கள் வீதிக்கு வந்தால் மசோதாக்களின் ஒவ்வொரு வரியையும் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு ஆளாக முடியும் என்பதை இவ்விரு அனுபவங்களும் நிரூபித்துள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மெருகேற்றவும் செய்துள்ளன. இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா மீது விழிப்பும், இயக்கங்களும் தொடர வேண்டியுள்ளன.
இது மக்கள் விரோத மசோதாக்களின் மீதான ஓர் தொழிற்சங்கத்தின் எதிர்வினை மட்டுமல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாடித்துடிப்பை பரிசோதித்து நாட்டின் நலம் பாதுகாக்கிற முயற்சி. மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்கிற கனவு ஈடேறுவதற்கான முயற்சியும் ஆகும். முடிவெடுத்தலில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான வழிமுறைக்கு ஓர் உதாரணம்.
நாம் மிக மிகச் சிறு உளிதான். நாம் விரும்புகிற பாரதத்தைச் செதுக்குவதற்கு
கோடானுகோடி உளிகள் தேவைபடுகின்றன.
No comments:
Post a Comment
Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.