Tuesday, March 20, 2012

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி உழைக்கும் மகளிர் சார்பாக சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் நம் தென்மண்டல இணைச் செயலாளர் தோழர் M . கிரிஜா பங்கேற்று கருத்துரை வழங்கினர் .                          

Thursday, March 8, 2012

எல்லையை விரிவாக்கும் எல்.ஐ .சி. மகளிரின் மாநில அளவிலான கலை விழா

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான எல்.ஐ .சி மகளிர் கலைவிழா காட்சிகளின் சில பதிவுகள் 
                                                                           

                                      

                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் கீதா
                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் NMS
                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் பாலபாரதி
 கலை விழாவினை வாழ்த்தி தோழர் குன்னி கிருஷ்ணன்
  சேலம் கோட்ட மகளிரின் குறுநாடகம்
 
                                           

                                    நெல்லை கோட்ட மகளிரின் கலை நிகழ்ச்சி 

                                    









Wednesday, March 7, 2012

உன்னதம் நிறைந்த உலக மகளிர் தினம்


உன்னதம் நிறைந்த உலக மகளிர் தினம்


20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பெண்கள் பரவலாகத் தொழிற்சாலை களில் பணியாற்ற ஆரம்பித்தனர். அன்று நிலவிய படுமோசமான வேலை நிலை மைகளை எதிர்த்துத் தொழிற்சங்கங்கள் பற்பல போராட்டங்களைக் கட்டவிழ்த் துக் கொண்டிருந்தன. வீடுகளை விட்டு வேலைக்காக வெளியே வந்த பெண் தொழிலாளிகளும் போராட்டங்களில் இறங்கினர். அதே காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களில், பெண்களுக்கு வாக்குரிமை என்ற அரசியல் கோரிக்கையும் எழ ஆரம்பித் தது. முதலாளித்துவ பெண்ணியவாதி கள், பெண்களுக்கு வாக்குரிமை என் பதை மட்டும் முன்வைத்த போது, கிளாரா ஜெட்கின் போன்ற சோஷலிஸ்டுகள், அனைவருக்கு வாக்குரிமை, அதில் பெண்களுக்கும் வாக்குரிமை என்ற கோஷத்தை எழுப்பினர். அன்றைய காலத்தில், சொத்து படைத்த ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றாமல், பெண்களுக்கு வாக்குரிமை கிடைத் தால், சொத்து படைத்த பெண்கள் மட்டும் தானே வாக்களிப்பவர்களாக மாறுவார்கள் என்பது அவர்களின் சரியான வாதமாக அமைந்தது.

இவ்வாறு ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும், மறுபக்கம் அர சியல் உரிமைகளுக்காகவும் போராட்ட அலைவீசத் துவங்கியது. இப்போராட்டங் களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித் தனர். உதாரணமாக, 1908ல் நியூயார்க் நகர பஞ்சாலை மற்றும் ஆடை நிறுவனங் களின் பெண் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, கூலி உயர்வு கோரிக்கை களை முன் வைத்து, தெருக்களை நிரப் பினர். காவல் துறையின் அடக்குமுறை யை சந்தித்தனர். 1909ல் கடும் பனி யிலும், 3 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர்.

இத்தகைய சூழலில், 1910ல் கோபன் ஹேகனில், இரண்டாவது உலக சோஷ லிசப் பெண்கள் மாநாடு நடந்தது. 17 நாடு களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில், ஜெர் மானிய கம்யூனிஸ்டு கிளாரா ஜெட்கினும், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா கொலந்தோயும் பெண்கள் பிரச்சனை கள் குறித்து வலுவாகப் பேசினர். அதன் முடிவில், பெண்கள் உரிமைகளைப் பேச, போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க, ஒரு தினம் உருவாக்கப் பட வேண்டும், பணி நிலை மேம்பாடு, வாக்குரிமை, உலக சமாதானம் போன்ற கோரிக்கை களுக்காக, அது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பிரகடனத்தை, கிளாரா ஜெட்கின் முன்மொழிந்தார். அப்போது, மார்ச் 8 என்பது தீர்மானிக்கப் படவில்லை.

பணி நிலை மேம்பாடு என்ற பெண் தொழிலாளிகளின் கோரிக்கையும், வாக் குரிமை என்ற அனைத்துப் பெண்களின் கோரிக்கையும், உலக சமாதானம் என்ற பொது கோரிக்கையும் அழுத்தம் பெற்றன என்பதைப் பார்க்கும் போது, பெண், உழைப்பாளியாகவும், குடிமகளாகவும் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கிறாள் என்கிற புரிதல் உருவானது தெளிவா கிறது. இந்தப் பின்னணியில்தான், 1911 முதல் உலகின் பல பாகங்களில் பெண் களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக, இத்தினம் கடைப்பிடிக்கப் பட்டு வரு கிறது. 1913ல் தான் மார்ச் 8 என்ற தேதி தீர்மானிக்கப்படுகிறது. ரஷ்யாவில் முதன் முறையாக, அந்த வருடத்தில் தான் பெண்கள் தினப் போராட்டங்கள் நடந்தன. 4 ஆண்டுகள் கழித்து, 1917 மார்ச் 8ல், ரஷ்யப் பெண்கள், உணவுக் கும், சமாதானத்துக்கும் குரல் கொடுத்து, வீறு கொண்டு பெட்ரோகிராடு நகரத் தெருக்களில், கடல் அலை போல் குவிந் தனர். நவம்பரில் ரஷ்யப் புரட்சி வெடித் தது. 1975ல் தான், ஐ.நா.சபை, மார்ச் 8, பெண்கள் தினமாக அனுசரிக்கப் பட அறைகூவல் விடுத்தது.
                    இத்தகைய தியாகம் நிறைந்த உன்னத நாளை போற்றுவோம் . ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்களின் போராட்டம் சமூக மாற்றத்தின் ஒரு பகுதியே  எனவே உயர்த்தி பிடிப்போம் மகளிர் நலன்களை ....

                                                                                     கட்டுரை:  தோழர்.  உ. வாசுகி



Monday, February 13, 2012

சுடராய் ஒளிரும் சுனில் மைத்ரா


சுனில் மைத்ரா பிறந்த தின கருத்தரங்கம் 


 
பிப் 9 , 2012 
தோழர் சுனில் மைத்ரவின் பிறந்த தின கூட்டம் மதுரை கோட்டச்சங்கம் சார்பில்  சங்க அலுவலகமான சுனில் மைத்ரா இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . தோழர் சுனில் மைத்ரவின் படத்திற்கு மதுரை கோட்டச்சங்க துணை தலைவர் தோழர் சந்திரசேகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். தோழர் வில்லியம்ஸ் தலைமையேற்க தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார் .

 தொழிற்சங்க வானில் சுடராய் ஒளிரும் தோழர் சுனில் மைத்ராவின் நினைவுகளை முன்னால் தென்மண்டல துணை தலைவர்
தோழர் E M ஜோசப் அவர்கள் நினைவு கூர்ந்தார் . தொழிற்சங்க பாதையில்  அவர் காட்டிய திசையில்  அவரது தத்துவார்த்த வெளிச்சத்தினை மனதில் ஏந்தி பயணிக்க அவர்தம் நினைவுகள் பயனாய்  அமைந்தது . நிகழ்வில்
தோழர் ரமேஷ்கண்ணன் அவர்கள் நன்றியுரை நவிழ்ந்தார்.


Monday, February 6, 2012

உலகமயக் கொள்கைகளை எதிர்த்து உயரும் உழைப்பாளிகளின் கரங்கள்

0 comments

பிப்ரவரி-28 , நாடு தழுவிய வேலைநிறுத்தம்




*காக்க... காக்க .. பென்சன்  காக்க 
*பொதுத்துறை காக்க...
*விலைவாசி உயர்விலிருந்து மக்களைக்  காக்க 

"ஒய் திஸ் கொலவெறி" என்று அரசாங்கத்திடம் கேட்கவேண்டும் . விவசாயிகளை,
சிறு வணிகர்களை , பொதுத்துறையை என்று அடுத்தடுத்து காவு கேட்கிற 
உலகமயக் கொள்கைகள் பாய்ந்திருக்கிறது பென்சன் மீதும் . இலவசங்களே 
வேண்டாம், விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று 
நடுத்தர, சாமானிய மக்களின் அலறல்.

120 ஆண்டுகளாய் உழைப்பாளி  மக்கள் அனுபவித்து வருகிற பென்சனுக்கு 
பேராபத்து. ஒய்வு பெற்றால் என்ன கிடைக்கும், கிடைக்குமா, பென்சனுக்கு 
காட்டிய பணமாவது திரும்பி வருமா என்று எந்த உத்தரவாதமும் இல்லாத 
புதிய பென்சன் திட்டம். காலமெல்லாம் உழைத்து சம்பாதித்த சேமிப்பெல்லாம் 
பங்குச் சந்தை சகுனிகளுக்கா?

2008 லிருந்து 2011 க்குள்ளாக 400 வங்கிகள் அமெரிக்காவில் திவால். அடித்த 
புயலில் அசையாமல் நின்ற இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை வெட்டி 
வீழ்த்த நினைக்கும் உள்ளூர்க் கோடாலிகளாக இநதிய ஆட்சியாளர்கள். 
சொந்த நாடுகளில் நம்பிக்கையை இழந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு 
இங்கே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிற அபாயம். சேமிப்பில் விருந்து 
தரலாம். ஆனால் இந்திய மக்களின் சேமிப்பையே விருந்தாக்க நினைக்கிறார்கள் 
மன்மோகன் வகையறாக்கள். 

காலிப்பணியிடங்கள் லட்சக் கணக்கில்... தனியார் மயமாவதால் இட ஒதுக்கீடும் 
களப்பலியாய்.. மாதச் சம்பளம் 2000 க்கும், 3000 க்கும் அல்லாடும் கோடானுகோடி 
உழைப்பாளிகள் உள்ள நாட்டில் அரசு துறைகளிலும் அத்தக்கூலிகள். தொகுப்பூதியம்,
மதிப்பூதியம் என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படும் அவலம். பஞ்சப்படி என்றால் 
என்னவென்றே தெரியாத 35 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள். முப்பது 
ரூபாயை பஸ்சுக்கே அழுதுவிட்டு சாப்பாடுக்கும், சந்ததிகளின் கல்விக்கும்,
நோய் நொடிக்கும் எங்கேதான் போவார்கள் பாவம் அவர்கள்.
சந்தைதான் விலைகளைத் தீர்மானிக்கும் என்று பெற்ற குழந்தைகளை நட்டாற்றில் 
விடுகிற குந்தியாக அரசாங்கம்.

இருக்கிற உரிமைகளும் பறிப்பு. பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசல்களில் எந்தக் 
கொடியும் கூடாதாம். எந்த சப்தமும் கூடாது. அமைச்சர்கள் சொன்னாலும் தூக்கி 
எறிகிற ஆணவம். சட்டம் என் கையில் என்று தெனாவட்டாகத் திரிகிற பெரும் 
தொழிலகங்களுக்கு விசிறி வீசுகிற ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும்.
நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிற மதுபானக் கடைகள் பிரதான சாலைகளில்.
ஆனால் ஜனநாயக வழியில் உண்ணா நோன்பு என்றால் மக்கள் வாசனையே 
இல்லாத பொட்டல்களில்.

தாவிக் குதிக்கிறது ஆண்டுக்காண்டு பில்லியனர்களின் சொத்து. ஆனால் போனஸ் 
உச்சவரம்போ நிலையாய் நிற்கிறது அதே இடத்தில். பணிக்கொடை வரம்புகளும் 
வளையாபதிகளாய்.

அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! பொதுத்துறை ஊழியர்களே! பிப்ரவரி 28 
வேலை நிறுத்தம் நமது எதிர்ப்பை, அரசின் போக்கிற்கான மறுப்பை வலுவாகத் 
தெரிவிக்கிற எழுச்சி மிக்க இயக்கம். வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்று 
துவங்கி உலகின் 1500 நகரங்களில் உழைப்பாளி மக்களின் கரங்களும், குரல்களும்
ஓங்கி இருக்கிற காலம். நாமும் இணைவோம். பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் அன்று 
தேசத்தின் சக்கரங்கள் நிற்கட்டும்.தவறான பாதையில் ஓடாமல் சரியான திசை 
நோக்கி திருப்புவதற்கு.

பெரியோர்களே ! தாய்மார்களே! 
இது மக்கள் நலன் காக்கும் போராட்டம். ஒரே பிரம்புதான் உங்கள் முதுகையும், நம்
அனைவரின் முதுகுகளையும் பார்க்கிறது பதம். கிடைக்காத வேலை, இறங்காத விலை,
எப்படி வைக்கமுடியும் அடுப்படியில் உலை என்று அரசிடம் கேட்கிற போராட்டத்திற்கு 
தர வேண்டும் ஆதரவு. வரவேண்டும் கை கோர்த்து.
தயார்தானே நீங்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிடம் சொல்லுங்கள். இது நமக்கான 
போராட்டம். காக்க..காக்க.. நலன் காக்க..உரிமை காக்க..தேசம் காக்க..

Monday, January 30, 2012

மதுரை கோட்டம் சதம் படைத்த விதம்

சன 30 , 2012 
                      மதுரை கோட்டம் முழுமையும் நான்காம் பிரிவு தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி தற்பொழுது புதிய பணிநியமன ஆணை பெறவுள்ள அணைத்து தோழர்களும் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்ட நிகழ்ச்சி மதுரை சுனில் மைத்ரா இல்லத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு மதுரை கோட்டச் சங்க தலைவர் தோழர் மீனாட்சி சுந்தரம் தலைமை ஏற்க துணைத் தலைவர் தோழர் மகாலிங்கம் வரவேற்புரை வழங்கினர் தென்மண்டல துணைத் தலைவர் தோழர் R தர்மலிங்கம் அவர்கள் சிறப்புரை வழங்கி உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டார் பென்சனர் சங்க மதுரை கோட்டசெயலாளர் தோழர் ராஜகுணசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் பொது இன்சூரன்ஸ் மதுரை கோட்டசெயலாளர் தோழர் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார் . கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் சங்கத்தின் மாண்புகளை ஒவ்வொருவரும் புதிய புதிய கோணங்களில் பதிவு செய்தனர்.உணர்வுகளும்,உணர்ச்சிகளும்ஒருங்கே அமைந்த அக் கூட்டத்தினை மதுரை கோட்டச் சங்க செயலாளர் தோழர் சுரேஷ்குமார் புதிய வரவு தோழர்களின் எதிர் கால கடமைகளையும், கண்ணியத்தையும் , கட்டுப்பாட்டினையும் வலியுறுத்தி நன்றி உரையாற்றினார் .  இத்தகைய மகத்தான நிகழ்வில் பங்கேற்ற, பங்காற்றிய அணைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
                             "இன்று புதிதாய் பிறந்தோம்
                              புதியதோர் உலகம் செய்வோம் "
என்ற பாரதிதாசனின் வரிகளை மனதில் ஏந்தி புறப்படுவோம் ... புதுஉலகம் படைத்திட